தனியார் பள்ளி ஹிஜாப் சர்ச்சை; திட்டமிடப்பட்ட அரசியல் நாடகம் கேரள பா.ஜ., தலைவர் குற்றச்சாட்டு
திருவனந்தபுரம் : கேரளாவின் கொச் சியில் உள்ள பள்ளுருத்தியில் இயங்கி வரும் கிறிஸ்தவ தனியார் பள்ளி மாணவி, 'ஹிஜாப்' அணிந்து வந்தது சர்ச்சையான நிலையில், இந்த விவகாரத்தின் பின்னணியில் வலுவான அரசியல் இருப்பதாக பா.ஜ., விமர்சித்துள்ளது. பள்ளுருத்தியில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில், விதிகளை மீறி, 8ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி, 'ஹிஜாப்' எனப்படும், தலையை மறைக்கும் துணி அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவியை கண்டித்த பள்ளி நிர்வாகம், அவரது பெற்றோரையும் அழைத்திருந்தது. தகராறு அப்போது அவர்களுடன், தடை செய்யப்பட்ட, 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்புடன் தொடர்புடைய எஸ்.டி.பி.ஐ., எனப்படும் இந்திய சமூக ஜனநாயக கட்சியினரும் பள்ளிக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டனர். மேலும், பள்ளி நிர்வாகத்தையும் அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், போலீஸ் பாதுகாப்பு கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த பள்ளி நிர்வாகம், நேற்று மற்றும் நேற்று முன்தினம் என இரு நாட்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அறிவித்தது. இதனால், பிற மாணவர்களின் வகுப்பு பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து பேசிய பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முக்கிய உறுப்பினரான ஜோஷி, ''கடந்த 30 ஆண்டுகளாக மாணவ - மாணவியர் அனைவரும் ஒரே விதமான பள்ளிச் சீருடையை அணிந்து வருகின்றனர். ஆனால், பள்ளி நிர்வாகத்தின் விதியை மீறி, அந்த மாணவி திடீரென ஹிஜாப் அணிந்து வந்ததால் பிரச்னை ஏற்பட்டது,'' என்றார். ஹிஜாப் விவகாரம் அம்மாநிலத்தில் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், இந்த சம்பவத்திற்கு மாநில பா.ஜ., தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கேரளாவில் அரசியல் வேறு மாதிரியாக திரும்பி இருக்கிறது. சரணாகதி அரசியலமைப்பு பற்றி ஒரு பக்கம் பேசும் காங்., மறுபக்கம் அது பற்றி கேள்வி எழுப்பும் ஜமாத் - இ - இஸ்லாமியுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சக்திகள் முன், காங்., சரணாகதி அடைந்துவிட்டது என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. கர்நாடகாவிலும் இது போன்ற நிகழ்வை ஏற்கனவே நாங்கள் பார்த்து விட்டோம். கேரளாவில் தற்போது சித்ரவதை செய்வது மாதிரியான அரசியல் நடக்கிறது. குறிப்பாக ஹிந்து மக்கள் அத்தகைய எரிச்சலை எதிர்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளியில் எழுந்த ஹிஜாப் சர்ச்சை நுாறு சதவீதம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. கேரளாவின் அரசியல் கலாசாரம் மற்றும் சமூக ஒற்றுமையை சோதிக்கும் செயல். காங்கிரஸ் ஆதரவுடன் நடக்கும் அரசியல் நாடகம். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, பள்ளியின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு ஆடை அணிந்து வருவதாக, முஸ்லிம் மாணவியின் தந்தை உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.