உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்பார்வை குழு பரிந்துரையை செயல்படுத்த கேரளாவுக்கு உத்தரவு

மேற்பார்வை குழு பரிந்துரையை செயல்படுத்த கேரளாவுக்கு உத்தரவு

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சேகர் நாப்டே, கிருஷ்ணமூர்த்தி, உமாபதி மற்றும் அரசு வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர் வாதிடுகையில், 'அணை பராமரிப்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த விடாமல், கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. 'உச்ச நீதிமன்ற உத்தரவுகளை கேரள அரசு கொஞ்சம் கூட மதிக்கவில்லை. எந்த வேலையையும் கேரள அரசு செய்ய விடுவதில்லை' என்றனர். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, ''முல்லை பெரியாறு அணை குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டும், அதை கேரள அரசு பின்பற்றவில்லை. குறிப்பாக, அணை பராமரிப்புக்காக தமிழக அரசுக்கு முதலில் அனுமதி வழங்கிய கேரள அரசு, பிறகு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது,'' என, வாதிட்டார்.இதன்பின், நீதிபதிகள் கூறியதாவது:இந்த விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாக இறங்கி தீர்வு கண்டிருக்க வேண்டும். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இரு தீர்ப்புகளை வழங்கி உள்ளோம். மூன்றாவதாக ஏதேனும் எதிர்பார்த்தீர்கள் என்றால், அதையும் வழங்க தயாராக இருக்கிறோம். தற்போது உள்ள அணைக்கு பதிலாக, புதிய அணை கட்ட வேண்டும் என, சில மனுதாரர்கள் கேட்டிருக்கின்றனர். அணை முழு அளவில் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை முதலில் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அணை பராமரிப்பு குறித்து தமிழக அரசு முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் முக்கியமானவை. வழக்கை வரும் 19க்கு ஒத்தி வைக்கிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில், ஏற்கனவே முல்லை பெரியாறு மேற்பார்வை குழு வழங்கிய பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்த வேண்டும். - டில்லி சிறப்பு நிருபர் - இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை