கேரளாவின் பிணைப்பு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்: பதவி விலகும் கவர்னர் ஆரிப் முகமது கான் நெகிழ்ச்சி
திருவனந்தபுரம்: 'கேரளா எனது இதயத்தில் மிகவும் சிறப்பான இடத்தை வகிக்கும். கேரளாவுடன் என் தொடர்பு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்,' என்று பதவி விலகும் கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவையொட்டி ஆரிப் முகமது கானுக்கு அதிகாரப்பூர்வமாக பிரியாவிடை வழங்கப்படவில்லை. முதல்வர் பினராயி விஜயனோ, அவரது அமைச்சரவை சகாக்களோ பல்வேறு பிரச்சினைகளில் அவருடன் முரண்பட்ட நிலையில் இன்று அவரைக் காணவோ அல்லது வழி அனுப்பி வைக்கவோ வரவில்லை.ஜனாதிபதி திரவுபதி முர்மு, சமீபத்தில், மணிப்பூர், மிஷோரம், கேரளா மற்றும் பீஹாருக்கு புதிய கவர்னர்களை நியமித்து உத்தரவிட்டார்.இதன்படி, ஆரிப் முகமது கான், பீஹார் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், புது டில்லிக்கு புறப்படுவதற்கு முன், திருவனந்தபுரத்தில் ஆரிப் முகமது கான் அளித்த பேட்டியில், மாநில மக்கள் அளித்த அனைத்து அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்காக மிகவும் நன்றியுடன் இருப்பேன் என்றார்.