உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 722 டன் இனிப்புகள் விற்று கே.எம்.எப்., புதிய சாதனை

722 டன் இனிப்புகள் விற்று கே.எம்.எப்., புதிய சாதனை

பெங்களூரு: கடந்த மாதத்தில் 722 டன் இனிப்புகள் விற்பனை செய்து, கே.எம்.எப்., புதிய சாதனை படைத்துள்ளது.கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில் மைசூர் பாக், பாதாம் பர்பி, லட்டு, முந்திரி பர்பி, தேங்காய் பர்பி, சாக்லேட் பர்பி, தார்வாட் பேடா, காஜு கட்லி, கோவா லட்டு.கோவா பாதாம் ரோல் உட்பட ஏராளமான இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு, கடைகள், பேக்கரிகள், பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த மாதம் தசரா, தீபாவளியை ஒட்டி கே.எம்.எப்., இனிப்புகள் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது.இது குறித்து கே.எம். எப்., நிர்வாக இயக்குனர் ஜெகதீஷ் அளித்த பேட்டி:இந்த ஆண்டின் துவக்கத்தில் யுகாதி, ரம்ஜான் பண்டிகையின்போது 16.50 லட்சம் லிட்டர் தயிர், 51 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து கே.எம்.எப்., சாதனை படைத்தது. கடந்த மாதம் தீபாவளி, தசரா பண்டிகைகளை ஒட்டி 722 டன் இனிப்புகளை விற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.கடந்த ஆண்டு தசரா, தீபாவளி பண்டிகையின் போது 400 டன் இனிப்புகள் விற்பனையாகி இருந்தன. இந்த ஆண்டு, எங்கள் ஊழியர்கள் நான்கைந்து மாதங்களுக்கு முன்பே பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்களை அணுகி, நந்தினி இனிப்பு பொருட்களை வாங்குவதற்கான முன்மொழிவை சமர்ப்பித்தனர். பல்வேறு நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப இனிப்புகளை வழங்கினோம். ஒரு நிறுவனம் 35 டன் மைசூர் பாக்கை வாங்கியது.நந்தினி பிராண்டின் கீழ் 30 வகையான இனிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தீபாவளிக்கு மைசூர் பாக், தார்வாட் பேடா அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம் 175 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் 151 கோடி வருவாய் இயற்றியது சாதனையாக இருந்தது.நந்தினி தோசை, இட்லி மாவு விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்டு துவக்கத்தில் ராகி அம்பாலி, ப்ரோ பயாடிக் தயிர் ஆகியவற்றை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தினோம். இந்த இரண்டு பொருட்களும் மைசூரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு கோடை காலத்தில் இரண்டு தயாரிப்புகளையும் பெங்களூரில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ