உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கே.ஆர்.எஸ்., பழைய மதகு ஷட்டர் விற்பனைக்கு விவசாயிகள் எதிர்ப்பு

கே.ஆர்.எஸ்., பழைய மதகு ஷட்டர் விற்பனைக்கு விவசாயிகள் எதிர்ப்பு

மாண்டியா : நால்வடி உடையார் காலத்தில், 2.5 கோடி ரூபாய் செலவில் பொருத்தப்பட்ட கே.ஆர்.எஸ்., அணையின் மதகுகளின் ஷட்டரை, கிலோவுக்கு வெறும் ஆறு ரூபாய்க்கு விற்க, காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷன் முடிவு செய்திருப்பதால், விவசாய சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கே.ஆர்.எஸ்., அணை வரலாற்று பிரசித்தி பெற்றது. நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் காலத்தில் கட்டப்பட்டது. அணை மதகுகளின் ஷட்டர்கள் மிகவும் பழையதானதால், அணையின் பாதுகாப்பை கருதி 150 மதகுகளின் ஷட்டர்களை, சமீபத்தில் காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷன் மாற்றியது.

கிலோவுக்கு ரூ.6

பழைய மதகு ஷட்டர்களை, கிலோவுக்கு 6 ரூபாய் வீதம் விற்க முடிவு செய்துள்ளது. இதற்கு விவசாய சங்கம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, விவசாய சங்க தலைவர் கெம்போகவுடா கூறியதாவது:நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் காலத்தில் கட்டப்பட்ட, கே.ஆர்.எஸ்., அணையின் வரலாற்று பிரசித்தி பெற்ற மதகுகளின் ஷட்டர்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்க முற்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.அன்றைய காலத்தில் 2.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அணை, உடையார் ஆட்சி காலத்தின் பெருமைக்குரிய அடையாளம். அணை கட்ட பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு பொருளையும், மியூசியத்தில் வைத்து பாதுகாப்பது நம் கடமையாகும்.

4 டன் எடை

ஆனால் காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷன் அதிகாரிகள், பழைய ஷட்டர்களை மாணிக்கேஸ்வரி என்ற நிறுவனத்துக்கு, கிலோவுக்கு ஆறு ரூபாய் வீதம் விற்பது துரதிருஷ்டவசமாகும்.ஒரு நுாற்றாண்டு காலம் பயன்பட்ட அணையின் ஒவ்வொரு மதகுகளின் ஷட்டரின் எடை நான்கு டன்களாகும். இதன்படி 150 மதகுகளின் ஷட்டரின் மொத்த எடை 608 டன். ஒரு கிலோ பழைய இரும்பின் விலை 40 ரூபாயாகும். ஷட்டர்களின் இன்றைய மதிப்பு 2.5 கோடி ரூபாயாகும். ஆனால் வெறும் 36 லட்சம் ரூபாய்க்கு விற்பதன் மர்மம் என்ன.ஷட்டர்களை விற்க வேண்டிய அவசியமும் இல்லை. கே.ஆர்.எஸ்., அணையின் பிருந்தாவனத்தில் ஏக்கர் கணக்கில் இடம் உள்ளது. இந்த இடத்தில், அணை கட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள், மாற்றப்பட்ட பொருட்களை கண்காட்சிக்கு வைத்து, அடுத்த சந்ததியினருக்கு அறிமுகம் செய்யலாம்.அணை கட்டுவதற்கு உடையாருக்கு, உதவியாக இருந்த திவான்கள், பொறியாளர்கள் பலரின் உருவப்படத்தை கண்காட்சியில் வைக்கலாம். அதற்கு பதிலாக சொற்ப தொகைக்கு விற்க வேண்டிய கட்டாயம் என்ன. மதகுகளின் ஷட்டர்களை விற்கும் எண்ணத்தை கைவிடாவிட்டால், போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை