| ADDED : பிப் 21, 2024 06:47 AM
பெங்களூரு : சரியான நேரத்தில் மழை பெய்யாதது, நிலத்தடி நீர்மட்டம் சரிவு உள்ளிட்ட பல காரணங்களால், பெங்களூரில் பிப்ரவரி மாதமே பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நகரை சுற்றி உள்ள வறண்ட பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க, 86 டேங்கர்களுடன் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தயாராக உள்ளனர். பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட குடிநீர் வடிகால் வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 110 கிராமங்களில், 51 கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.நகரின் குடிநீர் தேவையை ஜூன் மாதம் வரை பூர்த்தி செய்ய தேவையான தண்ணீர், கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளில் இருப்பு உள்ளது.இதுதொடர்பாக பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் சுரேஷ் கூறியதாவது:பெங்களூருக்கு மாதந்தோறும் 1.6 டி.எம்.சி., குடிநீர் தண்ணீர் தேவைப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரிய வரம்புக்கு உட்பட்ட 51 கிராமங்கள் மற்றும் அனைத்து குடியிருப்புகளுக்கும் காவிரி நீர் வழங்கப்படுகிறது. பிரச்னை ஏற்பட்டால், டேங்கர்கள் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.ஒவ்வொரு டேங்கரும் 6,000 லிட்டர் தண்ணீர் வழங்க முடியும். இது தவிர, கோடை மாதங்களில் குடியிருப்போருக்கு சிரமம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.குடிநீர் வடிகால் வாரிய அதிகார வரம்புக்கு உட்பட்ட போர்வெல்களை சர்வீஸ் செய்வதற்கும், சரி செய்வதற்கும் ஒரு குழுவை அமைத்து உள்ளது.பெங்களூரில் கடந்தாண்டு சராசரிக்கும் குறைவான மழை பெய்ததால், நிலத்தடி நீர் சரிந்தது. ஆழ்துளைக் கிணறுகளை சீரமைக்க, புதிய கிணறுகள், சிறிய குளங்கள் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.