UPDATED : ஆக 06, 2025 10:12 PM | ADDED : ஆக 06, 2025 09:58 PM
கட்சிரோலி: மஹாராஷ்டிராவில், மாரடைப்பு ஏற்பட்ட போலீஸ்காரரை, தனியார் நிறுவன நிர்வாக இயக்குனரான சேலத்தைச் சேர்ந்த பிரபாகரன், ஹெலிகாப்டரில் அழைத்துச்சென்று காப்பாற்றி உள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தின் தொலைதுார பகுதியான ஹெட்ரி போலீஸ் ஸ்டேஷனில் நாயக் ராகுல் சாஹேப்ராவ் கெய்க்வாட் 37, போலீஸ்காராக பணியாற்றி வருகிறார். அங்கு பணியில் இருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 2ம் தேதி நடந்தது. அவர் உள்ளூரில் செயல்படும்லாயிட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜியின் காளி அம்மாள் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவரை சிறப்பு இருதய மையத்திற்கு அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைக்கப்பட்டது.வாகனத்தில் கட்சிரோலியிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாக்பூருக்கு சாலை வழியாக செல்வதற்கு மூன்றரை மணி நேரம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் தாமதம் ஆகும் என்பதால், சக போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.லாயிட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி நிறுவனத்திடம் தொடர்பு கொண்டனர். அப்போது அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரபாகரன், இரும்புத்தாது சுரங்கங்களின் வழக்கமான ஆய்வுக்காக ஹெட்ரி வந்திருந்தார்.போலீஸ்காரருக்கு உதவி தேவைப்படுவதை அறிந்த அவர், கெய்க்வாட்டை உடனடியாக அழைத்து செல்ல தனது ஹெலிகாப்டரை பயன்படுத்தலாம் என்று கூறினார்.அதன்படி போலீஸ்காரர் ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டார். பிரபாகரனே பைலட்டாக இருந்து அந்த ஹெலிகாப்டரை ஓட்டிச் சென்று நாக்பூரில் தரை இறக்கினார்.அங்கு போலீஸ்காரருக்கு இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவரது உடல்நிலையை உறுதிப்படுத்திய பிறகு, ஆகஸ்ட் 4ம் தேதி மாலை வெற்றிகரமாக ஸ்டெண்ட் பொருத்தும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 5ம் தேதி இரவு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.தக்க நேரத்தில் போலீஸ்காரர் உயிரை காத்த தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் பிரபாகரனை போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பாராட்டினர்.பிரபாகரன், சேலத்தைச் சேர்ந்தவர். ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சுரங்கத் தொழில் துறையில் முன்னணி தொழிலதிபராக வலம் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.