கேரள காங்., - -எம்.எல்.ஏ., மீது மலையாள நடிகை பாலியல் புகார்
திருவனந்தபுரம்: கேரள காங்கிரஸ் - எம்.எல்.ஏ., ராகுல் மம்குட்டத்தில், பாலியல் தொல்லை அளித்ததாக மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் மற்றும் பெண் எழுத்தாளர் ஹனி பாஸ்கரன் ஆகியோர் குற்றஞ்சாட்டி உள்ளனர். சமீபத்தில் வெளியான 916 குஞ்சூட்டன் என்ற மலையாள படம் வாயிலாக பிரபலமானவர் நடிகை ரினி ஆன் ஜார்ஜ். முன்னாள் பத்திரிகையாளரான இவர், கேரளாவைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர், ஆபாச வீடியோக்களை அனுப்பி, தவறான நோக்கத்துடன் தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாக குற்றஞ்சாட்டினார். ஆபாச படம் இது குறித்து நடிகை ரினி கூறியதாவது: சமூக வலைதளம் வாயிலாக, கேரளாவின் பிரதான கட்சியைச் சேர்ந்த இளம் அரசியல் பிரமுகர் அறிமுகமானார்; சில நாட்களிலேயே எனக்கு ஆபாச போட்டோ, வீடியோக்களை அனுப்பினார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வருமாறு தவறான நோக்கத்துடன் அழைத்தார். கோபமடைந்த நான், அவரது கட்சி மேலிடத்தில் கூறுவேன் என கூறியபோது, 'யாரிடம் சொன்னாலும் கவலை இல்லை. எந்த அரசியல்வாதிக்காவது, இது போன்ற புகாரில் பிரச்னை ஏற்பட்டு இருக்கிறதா' என என்னிடம் ஏளனமாக கேட்டார். அந்த கட்சியின் தலைமையிடம் இது பற்றி தெரிவித்தும் பலன் இல்லை. அதே நேரத்தில், இந்த சம்பவத்துக்கு பின் தான், அவருக்கு கட்சி பதவிகள் கிடைத்தன; எம்.எல்.ஏ., ஆனார். குற்றச்சாட்டு அவர் பெயரையும், கட்சியையும் கூற விரும்பவில்லை. ஆனால், பல அரசியல்வாதிகளின் குடும்ப பெண்களே அவரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் தைரியமாக புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தன்னை ஹோட்டலுக்கு அழைத்த அரசியல் தலைவரின் பெயரை நடிகை ரினி குறிப்பிடவில்லை. ஆனால், 'கேரள மாநில இளைஞர் காங்., தலைவரும், பாலக்காடு எம்.எல்.ஏ.,வுமான ராகுல் மம்குட்டத்தில் தான் அந்த தலைவர்' என மலையாள பெண் எழுத்தாளர் ஹனி பாஸ்கரன் நேரடியாக குற்றஞ்சாட்டி உள்ளார். 'இளைஞர் காங்கிரசை சேர்ந்த பெண்களே ஏராளமான புகார்களை அளித்தபோதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என ஹனி விமர்சித்துள்ளார். இதையடுத்து, ராகுல் பதவி விலக வலியுறுத்தி, கேரள பா.ஜ., மற்றும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவு சார்பாக, பாலக்காடில் பேரணி நடந்தது. ஆனால், இந்த விவகாரமே, இப்போது தான் தங்கள் கவனத்துக்கு வந்துள்ளதாகவும், புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், காங்., மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சதீஷன் தெரிவித்தார்.
ராஜினாமா செய்த ராகுல்
நடிகை, எழுத்தாளர் என தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்ததையடுத்து, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் மம்குட்டத்தில் ராஜினாமா செய்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், 'கட்சி தலைமையில் இருந்து யாரும் என்னை ராஜினாமா செய்யுமாறு கூறவில்லை. இளைஞர் காங்கிரசாருக்கு சட்டசபை தேர்தல் பணிகள் ஏராளமாக உள்ளன. எனவே, என்னை நியாயப்படுத்தி, அவர்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனவே, தனிப்பட்ட முறையில் பதவியை ராஜினாமா செய்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.