மல்லேஸ்வரம் சிறுவன் பலி 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்
மல்லேஸ்வரம் : மல்லேஸ்வரத்தில் மாநகராட்சி மைதானத்தின் இரும்பு நுழைவு கேட் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், மாநகராட்சியின் நான்கு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.மல்லேஸ்வரத்தைச் சேர்ந்த விஜயகுமார் - பிரியா தம்பதி மகன் நிரஞ்சன், 10. இவர், செப்., 22ல் தனது சைக்கிளுக்கு செயினை சரிசெய்ய நண்பர்களுடன் கடைக்குச் சென்றார்.பின், அங்கிருந்த மாநகராட்சி மைதானத்துக்குச் சென்றனர்.மைதானத்தின் இரும்பு கேட் நுழைவு வாயிலை பிடித்து இழுத்தபோது, நிரஞ்சன் மீது விழுந்தது. படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர்களை சந்தித்த அமைச்சர் தினேஷ் குண்டுராவ், ஆறுதல் கூறி, “அரசிடம் நிவாரணம் பெற்றுத்தரப்படும்,” என தெரிவித்தார்.இதன்படி, துணை முதல்வர் சிவகுமார், நேற்று அளித்த பேட்டி:மல்லேஸ்வரத்தில் மாநகராட்சி மைதான கேட் விழுந்து உயிரிழந்த சிறுவன் நிரஞ்சன் குடும்பத்துக்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருந்த மாநகராட்சி உதவி இன்ஜினியர் சீனிவாஸ் ராஜு, உதவி செயல் பொறியாளர்கள் சாந்தாலா, தேவராஜ், ஆயிஷா உசேன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.சம்பவம் நடந்த மறுநாள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பணிகள் சரியாக நடக்கவில்லை என்றும், பராமரிப்பில் குறைபாடு இருப்பதாகவும் அதிகாரிகள் கண்டறிந்தனர். பணிகளை விரைந்து முடிக்குமாறும், ஒரு வாரத்தில், முழு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மூத்த அதிகாரிகள் கமிட்டிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.