உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் தந்தவர் கைது! டில்லியில் இருந்து ரசாயனம் சப்ளை செய்தது அம்பலம்

திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் தந்தவர் கைது! டில்லியில் இருந்து ரசாயனம் சப்ளை செய்தது அம்பலம்

நெல்லுார்: திருமலை திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க, தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வினியோகம் செய்த விவகாரத்தில், ரசாயனங்கள் சப்ளை செய்த டில்லியைச் சேர்ந்த வர்த்தகர் அஜய் குமார் சுகந்தா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் 21ம் தேதி வரை, அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தம். லட்டு தயாரிப்புக்கான நெய் கொள்முதலுக்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவ்வப்போது டெண்டர் விடுவது வழக்கம். அப்படி, கடந்த ஆண்டு மே மாதம் டெண்டர் விடப்பட்டதில், தமிழகத்தின் திண்டுக்கல்லில் இயங்கும் ஏ.ஆர்.பால் பண்ணை நிறுவனம், 10 லட்சம் கிலோ நெய் வினியோகத்துக்கு டெண்டர் எடுத்தது. அதிகாரிகள் சந்தேகம் அந்த நிறுவனத்தின் பெயரில் அனுப்பப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து, புனிதமான லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை வினியோகிக்க, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய அரசு அனுமதி அளித்ததாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார். இதனால், இந்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்ய, குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு ஆணைய ஆய்வகத்துக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில் கலப்படம் இருப்பது உறுதியானதால், தேவஸ்தான அதிகாரிகள் திருப்பதி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. நீதிமன்ற காவல் இக்குழு நடத்திய விசாரணையில், கொழுப்பை அதிகரிக்கும் வகையில், 'மோனோகிளைசிரைட்ஸ், அசிட்டிக் அமிலம்' போன்ற ரசாயனங்களை பாமாயில் எண்ணெயில் கலந்து, அதை நெய் போன்று மணம் வீச செய்து, திரிதிரியாக உருவாக்கியது தெரியவந்தது. இந்த ரசாயனங்களை, உத்தரகண்டில் இயங்கி வரும், 'போலேபாபா' பால் பண்ணைக்கு, டில்லியை சேர்ந்த வர்த்தகர் அஜய் குமார் சுகந்தா கடந்த ஏழு ஆண்டுகளாக வினியோகித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கலப்பட நெய் தான், வைஷ்ணவி மற்றும் ஏ.ஆர்.பால் பண்ணை போன்ற பிராண்டு பெயர்களில் திருப்பதி லட்டு பிரசாத தயாரிப்புக்கு வழங்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, வர்த்தகர் அஜய்குமார் சுகந்தாவை டில்லியில் கைது செய்து திருப்பதிக்கு அழைத்து வந்த அதிகாரிகள், நெல்லுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை, வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கைதான அஜய் குமாரிடம் இருந்து ரசாயன வினியோகம், நிதி பரிவர்த்தனை போன்ற தகவல்களையும் விசாரணை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
நவ 11, 2025 06:37

மக்களை மக்கள் ஏமாற்றுவது போதாதென்று, இப்பொழுது மக்கள் படைத்த கடவுளையே ஏமாற்ற கிளம்பியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் நம் நாட்டில் குற்றங்களுக்கு ஏற்ற தண்டனைகள் கொடுக்கப்படுவதில்லை.


visu
நவ 11, 2025 06:25

தெரித்தே செய்யும் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கலாம்


Appan
நவ 11, 2025 06:10

பிரசாதம் தயாரிப்பில் இப்படி நடப்பது வருத்தப்பட வேண்டிய செயல். இது எதனால்நடந்தது என்று அலசினால் ஆந்திராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் இது நடனந்தது என்று சொல்லலாம். ஆந்திராவில் ஜகன் மோகன் ரெட்டி என்ர இந்து பெயர் கொண்ட கிறிஸ்டியன் ஆட்சி செய்த போது இது நடந்தது. இந்துக்களின் புண்ணிய ஸ்தலமான திருப்பதியை நிர்வாகம் செய்ய ஒரு கிறிஸ்டியன் சி.எம் . அவர் ஒரு கிறிஸ்டியனை திருப்பதியின் நிர்வாகத்திக்கு நியமித்து திருப்பதியின் புனிதத்தை மாசு படுத்தினார். நேற்று கூட தமிழகத்தை சபாநாயகர் தொகுதியில் கோவில் பூஜாரியை ஒரு அரசு பஸ் கண்டக்டர் இழிவு படுத்தினார். ஏன் இந்த அப்பாவுவே இந்தியர்களுக்கு கல்வி கொண்டுவந்ததே கிறிஸ்டியன் தான் என்று பேசுகிறார். secularism என்று இந்துக்களை அவமதிப்பு செய்யலாமா.. ?. 100 கோடி இந்துக்கள் உள்ள நாட்டில் இந்துக்களை மதித்து நடக்கணும்.


D.Ambujavalli
நவ 11, 2025 05:46

இத்தகைய கலப்படப் பாதகம் நடந்துள்ளது தெரியாமல் லட்டுப்பிரசாதம் என்று கண்ணில் ஒற்றிக்கொண்டு சாப்பிடும் பக்தர்களை ஏமாற்றியதற்கு அந்த வெங்கடவன் என்ன தண்டனை அளிப்பான்?


Kasimani Baskaran
நவ 11, 2025 04:09

இது போன்ற கேடிகளுக்கு அவர்கள் தயாரித்த நெய்யில் தயாரித்த பண்டங்களை மட்டும் கொடுத்து சிறையில் பத்தாண்டுகள் வாழவைக்க வேண்டும். தனக்கு வந்தால்தான் வலி புரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை