அபார்ட்மென்ட் காரிடாரில் ஷூ ரேக் வைத்தவருக்கு ரூ.24,000 அபராதம்
பெங்களூரு : கர்நாடகாவில், அடுக்குமாடி குடியிருப்பில், தன் வீட்டு வெளிப்புற காரிடாரில், 'ஷூ ரேக்' வைத்தவருக்கு, குடியிருப்பு சங்கம், 24,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில், 'சன்ரைஸ் பார்க் அபார்ட்மென்ட்' உள்ளது. இதில் 1,046 வீடுகள் உள்ளன. விதிமுறை
தீயணைப்பு விதிமுறைகளின்படி, அடுக்குமாடி குடியிருப்புகளின் காரிடார்கள் காலியாக இருக்க வேண்டும். எந்த பொருட்களையும் வைக்க கூடாது. அவசர சந்தர்ப்பங்களில் மக்கள் வெளியேற, தீவிபத்துகள் நடந்தால் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் நோக்கில், இதுபோன்ற விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.ஆனால், 'சன்ரைஸ்' அபார்ட்மென்டில் வசிக்கும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், காரிடார்களில், 'ஷூ ரேக்' மற்றும் பூந்தொட்டிகள் உட்பட பல பொருட்களை வைத்துள்ளனர். இதை அகற்றும்படி அபார்ட்மென்ட் குடியிருப்போர் சங்கம் பலமுறை அறிவுறுத்தியது. இதனால், பலரும் அவற்றை அகற்றி தங்கள் வீட்டுக்குள் வைத்தனர். ஆனால் ஒருவர் மட்டும், ஷூ ரேக்கை அகற்ற மறுத்தார். எனவே, அவருக்கு குடியிருப்போர் சங்கம் தினமும் 100 ரூபாய் அபராதம் விதித்தது. இதற்காக, அவர் அசரவில்லை.மேலும், இத்தனை நாட்கள் விதிகளை மீறியதற்காகவும், வரும் நாட்களில் விதிகளை மீற உள்ளதற்கும் சேர்த்து 15,000 ரூபாய் அபராதம் செலுத்தினார். ஆனாலும், ஷூ ரேக்கை அவர் அகற்றவில்லை. ஆலோசனை
குடியிருப்போர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியதால், மீண்டும் 9,000 ரூபாய் அபராத தொகையை மொத்தமாக செலுத்தி, 'என்னை தொந்தரவு செய்யாதீர்கள். அபராதம் செலுத்த தயாராக இருக்கிறேன்' என, கூறிவிட்டார். குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைகின்றனர். அன்றாட அபராத தொகையை, 200 ரூபாயாக உயர்த்தலாமா என்றும் ஆலோசிக்கின்றனர்.