ரூ.73.27 லட்சம் மோசடி செய்தவர் சிக்கினார்
பாலக்காடு:ஆன்லைனில் 'டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறி, 73.27 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலத்தை சேர்ந்தவர், பாலக்காடு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில், ஆன்லைன் மூலமாக டிரேடிங் செய்து பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி, 73.27 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாக தெரிவித்தார். மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, மலப்புரம் பெருவள்ளூரை சேர்ந்த சுதீஷ்பாபு, 40, என்பவரை நேற்று கைது செய்தனர். போலீசார் கூறுகையில், 'புகார்தாரரை, 2024 டிச.,ல் 'டெலிகிராம்' ஆப் வாயிலாக, தொடர்பு கொண்டு, ஆன்லைன் டிரேடிங் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளனர். அதை நம்பிய புகார்தாரரிடம், 73.27 லட்சம் ரூபாயை, சுதீஷ்பாபு என்பவர் பெற்று, மோசடி செய்துள்ளார். சுதீஷ்பாபு மீது கொலை முயற்சி, அடிதடி உட்பட, 14 வழக்குகள் உள்ளன' என்றனர்.