ரூ.2 கோடி நகைகளை பஸ்சில் கடத்தியவர் கைது
தார்வாட்: மும்பையில் இருந்து தார்வாடுக்கு ஆம்னி பஸ்சில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.மும்பையில் இருந்து தார்வாடுக்கு, ஆம்னி பஸ்சில் தங்க நகைகள், பணம் கடத்தி வரப்படுவதாக தார்வாட் ரூரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை தார்வாட் அருகே நரேந்திரா கிராஸ் பகுதியில், வாகன சோதனை நடத்தினர். அங்கு வந்த, ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர்.லக்கேஜ் வைக்கும் இடத்தில், ஒரு சூட்கேசுக்குள் இருந்து தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சூட்கேசை கொண்டு வந்த, ராஜஸ்தான் மாநிலத்தின் பவர்சிங் சவுகான், 48, கைது செய்யப்பட்டார்.பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வெள்ளிப் பொருட்கள் 1,237 கிராம் இருந்தன. அதன் மதிப்பு 2 கோடி ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர். ஹூப்பள்ளியில் வசிக்கும் பவர்சிங், கூரியர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். தன்னுடன் வேலை செய்யும் நர்பால்சிங் பலோத் என்பவர் கூறியதன்பேரில், மும்பைக்கு சென்று நகை, வெள்ளிப் பொருட்களை வாங்கி வந்தது தெரிந்தது. நர்பால்சிங்கை போலீசார் தேடுகின்றனர்.