புதுடில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவையொட்டி, 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.திரவுபதி முர்மு, ஜனாதிபதி:
கல்வி, நிர்வாகம் ஆகிய இரு துறைகளையும், எளிமையாக கையாண்ட அரிதான தலைவர் மன்மோகன் சிங். இந்திய பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முக்கிய பங்களிப்பு அளித்தவர். நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவை, எளிமை குணம், மனிதாபிமான பண்பு, அரசியல் வாழ்க்கை ஆகியவற்றிற்காக, மக்கள் மனதில் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளப்படுவார்.
நரேந்திர மோடி, பிரதமர்:
நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த டாக்டர் மன்மோகன் சிங்கை இழந்து இந்தியா வாடுகிறது. எளிமையான பின்னணியில் இருந்து பொருளாதார மேதையாக உயர்ந்தார். நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசு பதவிகள் வசித்தவர், நம் பொருளாதார கொள்கையில் வலுவான முத்திரை பதித்தவர். பார்லிமென்டில் அவர் ஆற்றிய உரைகள், அறிவுப்பூர்வமானவை. நம் நாட்டின் பிரதமராக இருந்தபோது, மக்களின் வாழ்வை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர்.
அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர்:
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்து நாட்டின் நிதி அமைச்சராகவும், பிரதமராகவும் இருந்த டாக்டர் மன்மோகன் சிங், நம் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
மல்லிகார்ஜுனே கார்கே, தலைவர், காங்கிரஸ்:
தொலைநோக்கு பார்வையுடைய அரசியல்வாதி, பொருளாதார வல்லுனரையும் நம் நாடு இழந்துள்ளது. பணிவான மனிதர், தளராத அர்ப்பணிப்பு உணர்வுடன் நம் நாட்டிற்காக உழைத்தவர். மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் துறை, ரயில்வே, சமூக நலத்துறை அமைச்சராக இருந்ததில் பெருமிதம் கொள்கிறேன். தன் பேச்சை விடவும், செயலில் காட்டும் திறன் படைத்தவர்.
ஸ்டாலின், தமிழக முதல்வர்:
பெரும் தலைவரான மன்மோகன் சிங்கின் அறிவாற்றலும், தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. பிரதமராக அவரது பதவிக்காலம், நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதாக திகழ்ந்தது. தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்களில் எதிரொலிப்பதை அவர் உறுதி செய்தார். தமிழக மக்களுக்கு ஒரு நண்பராக அவர் விளங்கினார்.
ராகுல், காங்கிரஸ்:
இந்தியாவை மகத்தான அறிவுடனும் நேர்மையுடனும் மன்மோகன்சிங் ஜி வழிநடத்தினார். அவரது பணிவும், பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதலும் நாட்டை ஊக்கப்படுத்தியது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். நான் எனது வழிகாட்டி, குருவை இழந்துவிட்டேன். கோடிக்கணக்கான மக்கள் அவரை மிகவும் பெருமையுடன் நினைவு கூர்வர்.
7 நாள் துக்கம் அனுசரிப்பு:
மன்மோகன்சிங் மறைவையொட்டி, மத்திய அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அரசு விழாக்கள் எதுவும். நடைபெறாது. மன்மோகன் மறைவிற்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 11 மணிக்கு கூடும் எனுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.