உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  எம்.பி.,க்களுக்கு ஜன., 1 முதல் மருத்துவ சேவை உட்பட பல வசதிகள்

 எம்.பி.,க்களுக்கு ஜன., 1 முதல் மருத்துவ சேவை உட்பட பல வசதிகள்

எம்.பி.,க்கள், இருக்கும் இடத்திலேயே 24 மணி நேர மருத்துவ சேவை உட்பட பல்வேறு வசதிகளை பெற, வரும் ஜன., 1 முதல் சிறப்பு உதவி மையம் வாயிலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எம்.பி.,க்களின் பணிகள் இயல்பாகவும், பாதுகாப்பாகவும், நவீனமாகவும் மாற்றுவதற்கான செயல்திட்டத்தை, பார்லிமென்ட் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கொண்டு வந்துள்ளார். அதன்படி, நள்ளிரவு பயணத்திலோ, பொது வாழ்க்கையிலோ எம்.பி.,க் களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. ஏர் ஆம்புலன்ஸ் குறிப்பாக, தொலைதுாரத்தில் தனக்கு பரிச்சயம் இல்லாத இடத்தில், ஆய்வின் போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் சூழல் வந்தால், எம்.பி.,க்களுக்கு உதவ சிறப்பு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. அவசர காலத்தில் உதவி செய்யும் வகையில், அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இந்த உதவி மையம் செயல்படும் என கூறப்படுகிறது. இந்த சேவைக்காக பிரத்யேகமாக வழங்கப்பட்ட தொலைபேசி எண், வரும் ஜன., 1 முதல் செயல்பட உள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் சிரமத்தை எம்.பி.,க்கள் கூறினால் போதும், அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். போக்குவரத்து, உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளும் எம்.பி.,க்களுக்கு செய்து தரப்படும். மருத்துவ ரீதியாக நெருக்கடியான சூழலில், ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்து தரப்படும். தேவை ஏற்பட்டால், ஏர் ஆம்புலன்ஸ் எனப்படும் வான்வழி மருத்துவ சேவையும் வழங்கப்படும். இந்த வசதிகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு, எம்.பி.,க்களுக்கு தங்கு தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. அதேபோல், தங்கள் அலுவல் தொடர்பான ஆவணங்கள், கோப்புகளை எம்.பி.,க்கள் தேடி அலைந்த சூழலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பார்லி.,யில் உள்ள நுாலகம் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இங்கு புத்தக வடிவில் வைக்கப்பட்டிருந்த, பல ஆண்டுகளாக நடந்த விவாதங்கள், அதற்கான உரைகள், முக்கிய மசோதாக்கள், சட்டங்கள் குறித்த விபரங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுஉள்ளன. ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக, இந்த ஆவணங்களை தங்கள் விருப்ப மொழியில் மொழி மாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிநவீன வசதி இதனால், உரை தயாரிப்பு, மொழிபெயர்ப்பு போன்ற எம்.பி.,க்களின் பணிகள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது-. பார்லி., வளாகத்தில் உள்ள மருத்துவ வசதி மையம் புதுப்பிக்கப்பட்டு, அதிநவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது. அதேசமயம், இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் வசதியும், வரும் புத்தாண்டு முதல் எம்.பி.,க்களுக்கு வழங்கப்பட உள்ளது. நவீன தொழில்நுட்பங்களுடன் செயல்படும் மருத்துவமனைகளில் இவர்கள் உடல் பரிசோதனை செய்து கொள்ள முடியும். இந்த புதிய வசதிகள் வாயிலாக, 2026ம் ஆண்டு முதல் மாறுபட்ட சூழலில் பணியாற்றும் வாய்ப்பை எம்.பி.,க்கள் பெற உள்ளதாக பார்லி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்