சிவலிங்கம் அருகே இறைச்சி ஹைதராபாதில் பரபரப்பு
ஹைதராபாத் : தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதின் தப்பச்சாபுத்ரா என்ற இடத்தில், ஜிரா ஹனுமன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கம் அருகே, நேற்று இறைச்சி துண்டுகள் கிடந்தன. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.கோவிலுக்கு வந்த போலீசார், இறைச்சி துண்டுகளை சேகரித்தனர். இந்த செய்தியை அறிந்த உள்ளூர் மக்கள் மற்றும் பா.ஜ.,வினர், கோவில் முன் திரண்டதால் பரபரப்பு நிலவியது.டி.எஸ்.பி., சந்திரமோகன் கூறுகையில், ''சிவலிங்கம் அருகே, இறைச்சி துண்டுகளை ஏதாவது ஒரு விலங்கு கொண்டு வந்திருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். இதுகுறித்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கிறோம்,'' என்றார். இச்சம்பவம் குறித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜாசிங் கூறுகையில், ''ஹைதராபாதில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது தற்போது சர்வ சாதாரணமாகி விட்டது. எப்போது பார்த்தாலும், நாய் அல்லது பூனை இறைச்சியைக் கொண்டு வந்ததாக போலீசார் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை வேண்டும்,'' என்றார்.