உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் பஸ் மீது கார் மோதல் மருத்துவ கல்லுாரி மாணவர்கள் பலி

கேரளாவில் பஸ் மீது கார் மோதல் மருத்துவ கல்லுாரி மாணவர்கள் பலி

ஆலப்புழா, கேரளாவில், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் வந்த கார், அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர்.கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் வந்தனத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரியில் படித்த ஏழு மாணவர்கள், நேற்று முன்தினம் இரவு கனமழைக்கு இடையே திரைப்படம் பார்க்க 'டவோரா' காரில் சென்றனர். சங்கனாச்சேரி கூட்ரோடு நோக்கி சென்றபோது இவர்கள் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் காயங்குளம் நோக்கி வந்த அரசு பஸ் மீது மோதியதில், கார் முற்றிலும் நொறுங்கியது. போலீசார், உள்ளூர் மக்கள் இணைந்து, காரில் இருந்தவர்களை மீட்டனர்.இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். மற்ற நான்கு மாணவர்களும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் இருவர், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மற்ற இருவரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்கள், கேரளா வைச் சேர்ந்த தேவநந்தன், ஸ்ரீதேவ் வல்சன், ஆயுஷ் ஷாஜி, முகமது அப்துல் ஜப்பார், லட்சத்தீவைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் என தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே மருத்துவக் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தவர்கள். அனைவருமே 19 வயதுடையவர்கள்.விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின், அவர்கள் படித்த கல்லுாரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.அங்கு, நுாற்றுக்கணக்கான மாணவர்கள் கண்ணீர் மல்க அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.கவர்னர் ஆரிப் முகமது கான், அமைச்சர்கள் வீணா ஜார்ஜ், ஷாஜி செரியன், பிரசாத் உள்ளிட்டோரும் மாணவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி