மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
புதுடில்லி:டில்லி மெட்ரோ ரயிலில் சிகப்பு வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.டில்லி ரிதாலா மற்றும் உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் ஆகியவற்றுக்கு இடையே டில்லி மெட்ரோ ரயில் சிகப்பு வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்தத் தடத்தில் வெல்கம் மற்றும் சீலம்பூர் நிலையங்களுக்கு இடையே தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து இரு நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மற்ற நிலையங்களுக்கு இடையே வழக்கம்போல ரயில்கள் இயங்கின.நேற்று முன் தினம், ஹைதர்பூர் பட்லி மூர் மற்றும் ஜஹாங்கிர்புரி நிலையங்களுக்கு இடையே சிக்னல் கேபிள்களை விஷமிகள் சேதப்படுத்தியதால், மஞ்சள் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டு இருந்தது.