புதுடில்லி ரயில் நிலையத்தில் தங்கும் விடுதி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
புதுடில்லி,:“ரயில் நிலையங்களில் பயணியருக்கான வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன,” என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார் . தீபாவளி, சத் பூஜை ஆகியவற்றை முன்னிட்டு புதுடில்லி ரயில் நிலையத்தில் பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், புதுடில்லி ரயில் நிலையத்தில் பயணியருக்கான தங்குமிடம், ஓய்வறை, கழிப்பறை, குடிநீர் மற்றும் பொருட்கள் பாதுகாக்கும் அறை உள்ளிட்டவற்றை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். பாதுகாப்பு புதுடில்லி ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் தங்கும் விடுதியை ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின், நிருபர்களிடம் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: குறைந்த மற்றும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு முதன்மையான போக்குவரத்தாக ரயில் தான் அமைந்துள்ளது. ரயில் மற்றும் நிலையங்களில் பயணியரின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. புதுடில்லி ரயில் நிலையத்தில், 'யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற பயணியர் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இங்கு, 7,000 பயணியர் தங்கலாம். பிப்ரவரி 15ம் தேதி புதுடில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் 18 பயணியர் உயிரிழந்தனர். இதையடுத்து, புதுடில்லி ஆனந்த் விஹார், காஜியாபாத், வாரணாசி மற்றும் அயோத்தி ஆகிய ரயில் நிலையங்களில் பயணியர் தங்கும் விடுதி கட்ட உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேலும் 55 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயணியர் தங்கும் விடுதிகள் கட்டப்படும். அதிநவீன வசதிகள் கொண்ட யாத்ரி சுவிதா கேந்திராவில், பண்டிகைக் காலத்தில் பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மிகுந்த உதவியாக இருக்கும். மேலும், புதுடில்லி நிலையத்தில் - 2,860 ச.மீ., பரப்பளவில் டிக்கெட் முன்பதிவுக் கூடம் கட்டப்படுள்ளது. அதேபோல 1,150 ச.மீ., மற்றும் 1,218 ச.மீ., பரப்பளவில் கூடுதலாக இரண்டு என மொத்தம் மூன்று இடங்களில் டிக்கெட் முன்பதிவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் நெரிசல் ஏற்படாமல் பயணியர் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பொதுப்பெட்டி இங்கு, 22 நவீன டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் 25 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணியர் அமர 200 இருக்கைகள், அதிவேக மின் விசிறிகள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பண்டிகை காலத்தில் ரயில்களில் பொதுப் பெட்டிகள் அதிகரிக்கப்படும். சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசில் 34,000 கி.மீ., தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் நாடு முழுதும் 12,000 க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு, 10,700 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 150 ரயில்கள் முன்பதிவு இல்லாத ரயில்கள் தயார் நிலையில் உள்ளன. ரயில்வே துறையில் ஆட்சேர்ப்பு நடந்து வருகிறது. தற்போது, ஒரு லட்சத்து 30,000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில், 18,000 உதவி லோகோ பைலட்டுகள் பணியில் சேர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.