சண்டிகர்: பஞ்சாபில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர்கள், சேதங்களை பற்றி கவலைப்படாமல் சுவீடன் மற்றும் கோவாவுக்கு அவர்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து சிலாகித்து அரட்டை அடித்தது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீரின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் சட்லெஜ், பியாஸ், ரவி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, கிராமங்கள் மற்றும் விளைநிலங்களை மூழ்கடித்துள்ளது. பஞ்சாபில், 1988க்கு பின் ஏற்பட்ட மிக மோசமான வெள்ள பாதிப்பு இது என கூறப்படுகிறது. பதான்கோட், குர்தாஸ்பூர், பாசில்கா, கபுர்தலா, டர்ன் தரன், பெரோஸ்பூர், ஹோஷியார்பூர் மற்றும் அமிர்தசரஸ் பகுதிகளில் பெய்த கனமழையால் கிராமங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், எல்லையோர மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆம் ஆத்மியைச் சேர்ந்த மாநில அமைச்சர்கள் லால்ஜித் சிங் புல்லர், ஹர்பஜன் சிங், பரிந்தர் குமார் கோயல் ஆகியோர் படகில் சென்று பார்வையிட்டனர். அது அமைச்சர் புல்லரின், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பானது. 'லைப் ஜாக்கெட்' அணிந்து படகில் அமர்ந்தபடி வெள்ள பாதிப்பை பார்வையிட்ட மூன்று அமைச்சர்களும், இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை கூட மறந்து, சுவீடன் மற்றும் கோவாவுக்கு அவர்கள் சுற்றுலா சென்றபோது, அங்கு சொகுசு கப்பலில் பயணித்த அனுபவங்கள் குறித்து சுவாரசியமாக அரட்டை அடித்தனர். ஆடம்பர சுற்றுலா
இதை, 90,000 பார்வை யாளர்கள் பார்த்தனர். சிலர் அமைச்சர்களை கண்டித்து பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் பிரதாப் சிங் பஜ்வா கூறுகையில், “வெள்ள பாதிப்பில் சிக்கிய குடும்பங்கள் ஒரு டம்ளர் குடிநீருக்காக பிச்சை எடுக்கிறது. “ஆனால், ஆளும் ஆம் ஆத்மி அமைச்சர்கள் வெள்ள நிவாரண பயணத்தின்போது தங்கள் ஆடம்பர சுற்றுலா குறித்து பெருமை பேசுகின்றனர்,” என்றார்.