புதுடில்லி: சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று புறப்பட்டு செல்கிறார். அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கியது, 'ஜி - 7' அமைப்பு. இந்த நாடுகள் இடையிலான அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களை விவாதித்து, மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் அமைப்பாக, 'ஜி - 7' செயல்பட்டு வருகிறது. அழைப்பு
நடப்பாண்டிற்கான, 'ஜி - 7' நாடுகளின் உச்சி மாநாடு வட அமெரிக்க நாடான கனடாவின் கனனாஸ்கிஸ் என்ற இடத்தில் நடக்கிறது. சிறப்பு பிரதிநிதியாக, இந்த மாநாட்டில் பங்கேற்க நம் பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, பிரதமர் மோடி, ஜி - 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:பிரதமர் மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணமாக இன்று புறப்படுகிறார். முதல் நாடாக, மேற்காசிய நாடான சைப்ரஸ் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் அழைப்பின்படி, அந்நாட்டுக்கு பிரதமர் மோடி செல்கிறார். கடந்த 20 ஆண்டுகளில், சைப்ரஸ் நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி. சைப்ரஸ் தலைநகர் நிகோசியாவில், அந்நாட்டு அதிபர் கிறிஸ்டோடூலிட்சை சந்தித்து பிரதமர் பேச உள்ளார். அதன்பின் லிமாசால் நகரில், சைப்ரஸ் நாட்டின் தொழிலதிபர்களை சந்தித்து பேசுகிறார். இதைத்தொடர்ந்து, வட அமெரிக்க நாடான கனடாவின் கனனாஸ்கிஸ் என்ற இடத்தில் நடக்கும், ஜி - 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, நாளை செல்கிறார். இந்த மாநாட்டில், தொடர்ந்து ஆறாவது முறையாக பங்கேற்கும் பிரதமர் மோடி, பிற நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்க உள்ளார். பெருமை
அதன்பின், ஐரோப்பிய நாடான குரோஷியா பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி, வரும் 18ம் தேதி அந்நாட்டிற்கு செல்கிறார். அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார். இப்பயணத்தின் வாயிலாக, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து, இருநாட்டு தலைவர்களும் பேச உள்ளனர். அதன்பின், அந்நாட்டு அதிபர் ஜோரன் மிலானோவிக்கையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இதைத்தொடர்ந்து, அன்றைய தினமே நாடு திரும்புகிறார்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.