இன்று செப்டம்பர் 11. இந்த நாள், இரண்டு மாறுபட்ட நினைவுகளைத் துாண்டுகின்றன. முதலாவது, 1893-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர், புகழ்பெற்ற சிகாகோ உரையை ஆற்றிய நிகழ்வு. 'அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே...' என்ற வார்த்தைகளை உரைத்து, அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரின் இதயங்களை அவர் வென்றார். நம் நாட்டின் காலத்தால் அழியாத ஆன்மிக பாரம்பரியத்தையும், உலகளாவிய சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தையும் அறிமுகப்படுத்தினார். இரண்டாவது நிகழ்வு, கொடூரமான 9/11 தாக்குதல் சம்பவம். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தின் அச்சுறுத்தலால், இந்த கோட்பாடே தாக்குதலுக்கு உள்ளானது. இன்னொரு முக்கியத்துவம்
இந்த நாள் குறித்த மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயமும் உள்ளது. வசுதைவ குடும்பகம் என்ற கோட்பாட்டால் எழுச்சி பெற்று சமுதாய மாற்றத்திற்காகவும், ஒற்றுமை மற்றும் இணக்க உணர்வை வலுப்படுத்துவதற்காகவும், தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்த ஒரு தலைசிறந்த ஆளுமையின் பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுகிறது. ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்துடன் தொடர்புடைய லட்சக்கணக்கான மக்களால் அவர் மிகவும் மதிக்கப்படும் தலைவர் (சர்சங்சாலக்) என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிறார். ஆம்... நான் குறிப்பிடுவது திரு. மோகன் பகவத் அவர்களைத் தான். சுவாரசியமாக, ஆர்.எஸ்.எஸ்., தன் நுாற்றாண்டைக் கொண்டாடும் இந்த வருடத்தில், அவர் தன் 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று நலமாக வாழ, மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோகன் அவர்களின் குடும்பத்துடனான என் தொடர்பு, மிக வலிமையானது. அவரது தந்தை, மறைந்த மதுகர்ராவ் பகவத் அவர்களுடன் நெருங்கி பணியாற்றும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றிருந்தேன். ஜோதிபுஞ்ச் என்ற என் புத்தகத்தில், அவரைப் பற்றி விரிவாக நான் எழுதியிருக்கிறேன். சட்டத்துறையில், தனி ஈடுபாட்டுடன், தேச கட்டமைப்பிலும் அவர் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். குஜராத் மாநிலம் முழுதும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை வலிமைப்படுத்துவதில் அவர் மிக முக்கிய பங்காற்றினார். தந்தையின் ஈடுபாட்டை, அவரது மகன் மோகன் ராவும் முன்னெடுத்துச் சென்று இந்தியாவிற்கு புத்துயிரூட்டும் நோக்கத்துடன் செயல்பட்டார். பரஸ்மணி மதுகர்ராவ், மோகன் ராவ் இடத்தே மற்றொரு பரஸ்மணியை தயார் செய்தது போல தோன்றியது. கடந்த, 1970களின் மத்தியில், மோகன் அவர்கள் பிரசாரகராக மாறினார். 'பிரசாரகர்' என்ற வார்த்தையைக் கேட்டவுடன் கொள்கைகளை பறைசாற்றி, பிரசாரங்களில் ஈடுபடும் ஒருவர் என்று தவறான எண்ணம் தோன்றலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் செயல்பாடு பற்றி தெரிந்தவர்களுக்கு, பிரசாரகர் பாரம்பரியம் என்பது அமைப்புசார் பணியின் மையமாக விளங்குகிறது என்பது தெரிந்திருக்கக் கூடும். கடந்த 100 ஆண்டுகளில் தேச உணர்வினால் எழுச்சி பெற்று, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் விட்டு வந்து, இந்தியாவிற்கு முன்னுரிமை என்ற இயக்கத்தின் கனவை நனவாக்குவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் அவரது ஆரம்ப காலம் இந்திய வரலாற்றின் இருண்ட காலத்துடன் இணைந்திருந்தது. அப்போதுதான் அன்றைய காங்கிரஸ் அரசால் அறிவிக்கப்பட்டிருந்த மிக மோசமான அவசரநிலை அமலில் இருந்தது. அன்றாட சவால்
ஜனநாயக கோட்பாடுகளை மதித்து, இந்தியாவின் செழுமையில் விருப்பம் கொண்டிருந்த அனைவரும் அவசரநிலைக்கு எதிரான இயக்கத்தை வலிமைப்படுத்துவதில் தீவிரம் காட்டினர். மோகன் அவர்களும், எண்ணிலடங்காத ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களும் இதையேதான் செய்தனர். மகாராஷ்டிராவின் ஊரக மற்றும் பின்தங்கிய பகுதிகளில், குறிப்பாக விதர்பாவில் அவர் தீவிரமாக பணியாற்றினார். ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அன்றாட சவால்களைப் பற்றிய அவரது புரிதலுக்கு இந்த நிகழ்வு வடிவம் கொடுத்தது. அதன் பிறகான ஆண்டுகளில், பகவத் அவர்கள் ஏராளமான பொறுப்புகளை வகித்தார். தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் ஒவ்வொன்றையும் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் சிரத்தையுடன் அவர் மேற்கொண்டார். கடந்த, 1990 களில் அகில இந்திய இளைஞர் படையின் உடற்பயிற்சி பொறுப்பாளராக இருந்தபோது அவர் ஆற்றிய சீரிய பணிகளை ஏராளமான தொண்டர்கள் இன்றும் நினைவு கூர்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் பீகார் மாநிலத்தின் கிராமங்களில் அதிகமான நேரத்தை அவர் செலவிட்டார். இது போன்ற அனுபவங்கள், அடித்தட்டு அளவில் நிலவும் பிரச்னைகளுடனான அவரது இணைப்பை மேலும் ஆழப்படுத்தியது. கடந்த, 2000-ம் ஆண்டில் பொதுச்செயலராக பதவி வகித்த அவர் தமது தனித்துவம் வாய்ந்த செயல்பாடுகளினால் மிகுந்த சவாலான விஷயங்களையும் சுமுகமாகவும், துல்லியமாகவும் கையாண்டார். 2009-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றதுடன் தொடர்ந்து மிகவும் துடிப்பாக பணியாற்றி வருகிறார். தலைவர் பதவி என்பது ஒரு நிறுவன பொறுப்பை விட மேலானதாகும். தனிநபர் அர்ப்பணிப்பு, துல்லியமான நோக்கம் மற்றும் பாரதத் தாயிடம் உறுதியான நிலைப்பாடு போன்ற செயல்பாடுகளால் தலைசிறந்த ஆளுமைகள் இந்த பொறுப்பை வரையறை செய்திருக்கின்றனர். தனக்கு அளிக்கப்பட்ட இமாலய பொறுப்பிற்கு முற்றிலும் நேர்மையை வெளிப்படுத்தியதுடன், தமது வலிமை, ஆழ்ந்த ஞானம் மற்றும் இரக்க குணத்துடன் கூடிய தலைமைத்துவத்தையும் மோகன் அவர்கள் அளித்துள்ளார். இவை அனைத்தும் தேசத்திற்கு முன்னுரிமை என்ற கொள்கையால் ஈர்க்கப்படுகின்றன. அவர் அவ்வப்போது பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களுடன் கலந்துரையாடுவது, இன்றைய ஆற்றல் மிக்க டிஜிட்டல் உலகில் மிகவும் பயனளித்துள்ளது. விரிவாக சொல்ல வேண்டுமானால், பகவத் அவர்களின் பதவிக்காலம், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாறாண்டு கால பயணத்தில் மாற்றகரமான தருணமாகக் கருதப்படும். சீருடையில் கொண்டுவரப்பட்ட மாற்றம் முதல், பயிற்சி முகாம்களை மாற்றி அமைத்தது வரை அவரது தலைமையின் கீழ் ஏராளமான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஊக்கம்
தேசிய கலாசாரத்திற்கும், நம் நாட்டின் கூட்டு உணர்விற்கும் ஆற்றல் அளிக்கும் ஒரு நிலையான ஆலமரம் போல ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு செயல்படுவதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற நாக்பூரின் மாதவ் நேத்ரா மருத்துவமனையின் துவக்க விழாவில் நான் கூறியிருந்தேன். இந்த ஆலமரத்தின் வேர்கள் மாண்புகளில் நங்கூரமிடப்பட்டிருப்பதால், அவை ஆழமாகவும் வலிமையாகவும் இருக்கின்றன. இத்தகைய மாண்புகளை வளர்ப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் மோகன் பகவத் அவர்கள் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட விதம் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. மென்மையாக பேசும் இயல்பு, மோகன் அவர்களின் ஆளுமையின் மற்றொரு பாராட்டத்தக்க குணம் என்னவெனில் பிறர் கூறுவதை உன்னிப்பாக கவனிக்கும் திறனை அவர் பெற்றிருக்கிறார். இந்தப் பண்பு ஒரு ஆழ்ந்த கண்ணோட்டத்தை உறுதி செய்வதுடன், அவரது ஆளுமை மற்றும் தலைமைத்துவத்திற்கு உணர்திறன் மற்றும் கண்ணியத்தை அளிக்கிறது. துாய்மை இந்தியா இயக்கம், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டம் மூலமாக ஒட்டு மொத்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் குடும்பத்தையும் அவர் எப்போதும் உற்சாகப்படுத்துகிறார். சமூக நலனை மேம்படுத்துவதற்காக அவர் ஐந்து மாற்றங்களை முன்வைத்துள்ளார்-. சமூக இணக்கம், குடும்ப மாண்புகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தேசிய சுயநலம் மற்றும் பொதுமக்களுக்கான கடமைகள். இவை அனைத்து தரப்பு இந்தியர்களுக்கும் ஊக்கமளிக்கும். பகவத் அவர்கள், 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற கொள்கைக்கு எப்போதுமே குரல் கொடுத்து வருகிறார். இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் நம் நாட்டின் அங்கமாக இருக்கும் பல்வேறு கலாசார மற்றும் பாரம்பரிய கொண்டாட்டங்களில் அவர் தீவிர நம்பிக்கை கொண்டிருக்கிறார். தமது பரபரப்பான பணிகளுக்கு இடையேயும் இசை, பாடல் உள்ளிட்ட தமக்கு ஆர்வமுள்ள விஷயங்களுக்கும் நேரம் ஒதுக்க மோகன் அவர்கள் தவறுவதில்லை. பல்வேறு இந்திய இசைக் கருவிகளில் அவர் புலமை பெற்றிருப்பது, வெகு சிலருக்கு தான் தெரியும். வாசிப்பின் மீது அவர் கொண்டுள்ள ஆர்வத்தை, அவரது உரைகள் மற்றும் கலந்துரையாடல்களில் இருந்து அறியலாம். மைல்கல்
இந்த ஆண்டு, இன்னும் சில நாட்களில் ஆர்.எஸ்.எஸ்., 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தின் ஒற்றுமை என்னவெனில் இந்த ஆண்டு விஜயதசமி, காந்தி ஜெயந்தி, லால் பகதுார் சாஸ்திரி ஜெயந்தி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,சி-ன் நுாற்றாண்டுக் கொண்டாட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் அமைவது தற்செயலான ஒன்று. இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆர்.எஸ்.எஸ்., உடன் தொடர்புடைய லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு மைல்கல் சாதனையாகும். மிகுந்த ஞானமும் கடின உழைப்பாளியுமான மோகன்ஜியை தலைவராக நாம் பெற்றிருக்கிறோம், நம்மை சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். மோகன் அவர்கள் வசுதைவ குடும்பகம் என்பதற்கு ஒரு வாழும் உதாரணம். நாம் எல்லைகளைக் கடந்து அனைவரும் நம் சொந்தம் என்று உணரும்போது, அது சமூகத்தில் நமது நம்பிக்கை, சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை வலுப்படுத்துகிறது. நான் மீண்டும் ஒருமுறை மோகன் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் தாய்நாட்டுக்கு சேவையாற்ற வேண்டுமென வாழ்த்துகிறேன்! - பிரதமர் நரேந்திர மோடி -