UPDATED : செப் 20, 2025 08:27 PM | ADDED : செப் 20, 2025 06:37 PM
புதுடில்லி: நடிகர் மோகன் லால் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், மோகன்லாலுக்கு 2023ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மோகன்லாலின் குறிப்பிடத்தக்க சினிமா பயணம் வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும்.இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக புகழ்பெற்ற நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கவுரவிக்கப்படுகிறார். இந்த விருது வரும் செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.யார் இந்த மோகன்லால்?* பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் தான் மோகன்லால். இவர் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து வருகிறார்.* இவர் பெரும்பாலும் மலையாள, கன்னட சினிமாத் துறையில் பணிபுரிகிறார். 400க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்துள்ளார்.* இந்திய சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக மத்திய அரசு, நாட்டின் மிக உயர்ந்த இரண்டு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. 2001ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2019ம் ஆண்டு பத்ம பூஷன் விருதுகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
மத்திய அமைச்சர் பாராட்டு
தாதாசாகேப் பால்கே விருது பெற உள்ள மோகன்லாலுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் அவரது படைப்புகளை பாராட்டியுள்ளார். கடந்த 2022ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி வாழ்த்து
தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் மோகன் லாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ' மோகன்லால் திரைத்துறையில் சிறந்து விளங்குகிறார். அவர் மலையாள சினிமா, நாடகத் துறையில் முன்னணியில் இருக்கிறார். கேரள கலாசாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் அவர் நடித்துள்ளார். அவரது சினிமா மற்றும் நாடகத் திறமை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. தாதாசாகேப் பால்கே விருது பெற உள்ள அவருக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனைகள் வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமையும்' என குறிப்பிட்டுள்ளார்.