குடும்பத்தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை
திருவனந்தபுரம்:குடும்பத்தகராறில் இரண்டு குழந்தைகளை எரித்துக் கொன்ற பின்னர் தாய் தீக்குளித்து தற்கொலை செய்தார். கேரள மாநிலம் கொல்லம் அருகே கருநாகப்பள்ளி ஆதி நாடு பகுதியைச் சேர்ந்தவர் கிரிஷ். குவைத்தில் பணிபுரிகிறார். மனைவி தாரா கிருஷ்ணா 36. இவர்களுக்கு ஏழு மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கணவர் வீட்டாருக்கும் தாராவுக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக தாரா குழந்தைகளுடன் தனி வீட்டில் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் மதியம் கணவர் வீட்டுக்கு சென்றபோது அங்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தனது வீட்டுக்குச் திரும்பிய தாரா, குழந்தைகளின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தானும் தீக்குளித்தார். வீடு எரிவதை கண்டு அக்கம் பக்கத்தினர் கருநாகப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து மூன்று பேரையும் ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூன்று பேரும் இறந்தனர். கருநாகப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.