காதல் விவகாரத்தில் தாய், மகன் கொலை
பெலகாவி: காதல் விவகாரத்தில் தாய், மகன் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். வாலிபர் கைது செய்யப்பட்டார்.பெலகாவி நிப்பானி அகோலா கிராமத்தில் வசித்தவர் மங்களா நாயக், 45. இவரது மகன் பிரஜ்வல், 18. நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் மங்களா வீட்டிலிருந்து வெளியே வரவில்லை.சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மங்களாவும், பிரஜ்வலும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். மஞ்களாவின் மகளான 15 வயது சிறுமி வீட்டில் இல்லை.பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் விசாரித்த போது ரவி, 30, என்பவரும், மங்களாவின் மகளும் காதலித்ததும், இந்த காதலுக்கு மங்களா எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்தது. இதனால் ரவி வீட்டிற்கு போலீசார் சென்றனர். வீட்டின் ஒரு அறையில் இருந்த மங்களாவின் மகளை மீட்டனர்.ரவியிடம் விசாரித்த போது, 'காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மங்களாவை அரிவாளால் வெட்டினேன். தடுக்க முயன்றதால் பிரஜ்வலுக்கும் வெட்டு விழுந்தது. இருவரும் இறந்து விட்டனர். என் காதலியை அங்கிருந்து அழைத்து வந்தேன்' என, போலீசாரிடம் கூறினார். இதனால், அவரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் மங்களாவின் மகளுக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.