உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவதுாறு வழக்கை தள்ளுபடி செய்ய கோரிய எம்.பி., கங்கனாவின் மனு நிராகரிப்பு

அவதுாறு வழக்கை தள்ளுபடி செய்ய கோரிய எம்.பி., கங்கனாவின் மனு நிராகரிப்பு

டில்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பெண் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதற்காக தொடரப்பட்ட அவதுாறு வழக்கை ரத்து செய்யக் கோரி, பா.ஜ., - எம்.பி., கங்கனா ரனாவத் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

போராட்டம்

மத்திய அரசு அறிமுகம் செய்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, 2020ல் டில்லியில் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப், ஹரியானா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இதில் பங்கேற்றனர். 2021ம் ஆண்டு வரை நீடித்த போராட்டத்தில், பெண் விவசாயிகளும் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மஹீந்தர் கவுர், 73, என்ற பெண்ணின் போராட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் நடிகை கங்கனா ரனாவத், 2021ல் பதிவு செய்தார். அதில், 'குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடி, டைம்ஸ் நாளிதழின் புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இடம்பெற்ற பாட்டிதான் இது. 'இந்த வலிமையான பெண், தற்போது, 100 ரூபாய்க்காக விவசாயிகள் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்' என, குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, கங்கனா மீது பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மஹீந்தர் சிங் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் கங்கனா மனு தாக்கல் செய்தார். அந்த மனு, கடந்த 2022ல் தள்ளுபடி செய்யப்பட்டது. அனுமதி இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். தற்போது, ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதி பா.ஜ., - எம்.பி.,யாக உள்ள நடிகை கங்கனா ரனாவத் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கங்கனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'எந்த உள்நோக்கத்திலும், கங்கனா இந்த கருத்தை பதிவு செய்யவில்லை. சமூக வலைதளங்களில் போராட்டம் தொடர்பான தகவலை மட்டுமே பகிர்ந்தார்' என, வாதிட்டார். இதற்கு நீதிபதிகள், 'கங்கனா ரனாவத் போராட்ட செய்தியை மட்டும் பகிரவில்லை. கூடுதலாக, கொஞ்சம் மசாலா சேர்த்து தன் சொந்த கருத்துகளை பதிவிட்டுள்ளார். உங்களுக்கு ஏதாவது விஷயத்தை சொல்ல வேண்டும் என்றால், வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்றத்திடம் சொல்லுங்கள். அவதுாறு வழக்கை தள்ளுபடி செய்வது தொடர்பான மனுவை நீங்களாகவே திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையேல், நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்' என, தெரிவித்தனர். மனுவை திரும்ப பெற கங்கனா தரப்பு சம்மதித்ததை அடுத்து, அதற்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி