உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபாவில் தே.ஜ., கூட்டணி பலம் அதிகரிப்பு! பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி எதிரொலி

ராஜ்யசபாவில் தே.ஜ., கூட்டணி பலம் அதிகரிப்பு! பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி எதிரொலி

புதுடில்லி: தமிழகத்தில், அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்திருப்பதால் ராஜ்யசபாவில் தே.ஜ., கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது. ராஜ்யசபாவில் மசோதாக்களை நிறைவேற்றுவதில் பா.ஜ., அரசுக்கு இருந்த சிக்கல், 10 ஆண்டுகளுக்கு பின் நீங்கியுள்ளது.லோக்சபாவில் நிறைவேற்றப்படும் எந்தவொரு மசோதாவும் ராஜ்யசபாவில் வந்து தான் சட்டமாக உருமாற முடியும். இதற்கு இந்த சபையில் பெரும்பான்மை எம்பி.,க்கள் அவசியம். தற்போது ராஜ்யசபாவில் மொத்தமுள்ள 245 இடங்களில், ஒன்பது இடங்கள் காலியாக உள்ளன. இதன்படி தற்போது உள்ள 236ல் பெரும்பான்மைக்கு, 119 இடங்கள் தேவை.

காய் நகர்த்தல்

இதில், பா.ஜ., - எம்.பி.,க்கள் மட்டும் 98 பேர்; தே.ஜ., கூட்டணிக்கு, 119 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த பலத்தை மேலும் அதிகரிக்க பா.ஜ., மேலிடம் முயற்சிக்கிறது.இந்நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. இதன் வாயிலாக தமிழக சட்டசபையில் இடம் பெறுவதுடன், ராஜ்யசபா உறுப்பினர்களையும் பெருக்கி கொள்ள முடியும் என, பா.ஜ., திட்டமிட்டு காய் நகர்த்தியுள்ளது.இப்போது, தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இணைந்துள்ளது. ராஜ்யசபாவில் அ.தி.மு.க.,வுக்கு தம்பிதுரை, சி.வி.சண்முகம், தர்மர், சந்திரசேகர் என நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். இதனால், ராஜ்யசபாவில், 119 ஆக உள்ள தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் எண்ணிக்கை, 123 ஆக அதிகரிக்கும். பா.ம.க.,வை சேர்ந்த அன்புமணியின் பதவிக்காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது.தமிழக சட்டசபையின் தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், இந்த உறுப்பினர் பதவி அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கும்; இது, ராஜ்யசபாவில் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஐந்தாக அதிகரிக்கும். தே.ஜ., கூட்டணி எண்ணிக்கை, 124 ஆக உயரும். ஆந்திராவில் ஒரு ராஜ்ய சபா இடம் காலியாக உள்ளது. இது முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியிடம் இருந்தது. இது, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வசம் வரும்.

எதிர்பார்ப்பு

இதேபோல், நியமன எம்.பி.,க்களுக்கான ஆறு இடங்கள் காலியாக உள்ளன. இதுவும் பாஜ.,வுக்கு சாதகமாகவே இருப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.ஜம்மு - காஷ்மீரில் நான்கு ராஜ்யசபா உறுப்பினர்கள் இடம் காலியாக உள்ளன. தேர்தல் நடக்கும் போது, ​​90 எம்.எல்.ஏ.,க்களை உடைய சபையில், 29 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பா.ஜ., குறைந்தது ஒரு இடத்தையாவது வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு இடம் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.இது தவிர பல்வேறு மாநிலங்களில் காலியாகும் இடங்களில் சிலவும் பா.ஜ.,வுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவற்றை சேர்த்தால், தே.ஜ., கூட்டணிக்கு 140 உறுப்பினர்கள் கிடைப்பர். இதுவரை இல்லாத அளவிற்கு, 2014க்குப் பின் அதிக பெரும்பான்மை உடைய கூட்டணியாக ராஜ்யசபாவில் திகழும். ஏற்கனவே வக்ப் சட்ட மசோதா நிறைவேற்ற பெரும்பாடு பட வேண்டியிருந்தது. நள்ளிரவு முதல் விடிய, விடிய விவாதம் நடந்தது. இதில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க., எதிராக ஓட்டளித்தன.பா.ம.க, வெளிநடப்பு செய்தது. 128 பேர் ஆதரவுடன் வக்ப் மசோதா நிறைவேறியது.இது போல், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதா விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்குள் தே.ஜ., கூட்டணி ராஜ்யசபாவில் பெரும் பலம் பெறும் என, பா.ஜ., மூத்த தலைவர்கள் நம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை