UPDATED : மே 20, 2025 10:54 AM | ADDED : மே 19, 2025 08:06 PM
புதுடில்லி: குற்றவாளிகளை பிடிக்க, புதிய முயற்சியாக, இ-ஜீரோ எப்.ஐ.ஆர்., என்ற புதிய முறையை உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (14சி) அறிமுகப்படுத்தி உள்ளது.இ-ஜீரோ எப்.ஐ.ஆர் என்பது ஒரு புகார் பதிவு செய்யும் நடைமுறையாகும். இது எங்கு ஒரு புகார் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விதியை மாற்றுகிறது. இதற்கு முன்பு, ஒருவர் தங்களுடைய புகாரை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் சென்று பதிவு செய்ய வேண்டும். ஆனால் தற்போது, எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். அந்த புகார் பின்னர் குற்றத்தின் உண்மையான இடத்திற்கு மாற்றப்படும். இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளதாவது:சைபர்-பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சைபர் பாதுகாப்பு கட்டடத்தை வலுப்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், முதலில்டில்லிக்கான ஒரு முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்ட இந்த புதிய அமைப்பு, என்.சி.ஆர்.பி அல்லது 1930 என்ற எண்ணில் பதிவு செய்யப்படும் சைபர் நிதி குற்றங்களை தானாகவே எ.ப்.ஐ.ஆர்.,களாக மாற்றும். இந்த புதிய முறையில், ஆரம்பத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள சைபர் நிதி குற்றங்களின் விசாரணை நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் நாடு முழுவதும் இந்த முறை விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.