பாதசாரிகள், சைக்கிள்கள் இயக்கத்துக்கு புதிய சாலை விதிகள்: கோர்ட் உத்தரவு
'அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும், பொது இடங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதசாரிகள் மற்றும் மோட்டார் அல்லாத வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் ஆறு மாதங்களுக்குள் சாலை விதிகளை உருவாக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் கோவையைச் சேர்ந்தவர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜசேகரன். நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவது தொடர்பாக இவர் உச்ச நீதிமன்றத்தில், 2012ல் வழக்கு தொடர்ந்தார். மனுவில், 'நாட்டில், சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன. அவற்றைத் தடுக்கும் வகையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என, கோரியிருந்தார். கடந்த, 13 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வி.விஸ்வநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மோட்டார் வாகன சட்டம் 1988-ன் பிரிவு 138 - 1ஏ மற்றும் 210டி பிரிவுகளின் கீழ், மோட்டார் பொருத்தப்படாத வாகனங்களான சைக்கிள், கை வண்டிகளின் இயக்கத்தையும், பாதசாரிகள் சாலையை கடப்பதையும் ஒழுங்குபடுத்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் விதிகளை உருவாக்க வேண்டும். இதுவரை அதற்கான விதிகள் இல்லை எனில், ஆறு மாதங்களில் அவற்றை உருவாக்க வேண்டும். அதே போல் தேசிய நெடுஞ்சாலைகள் தவிர்த்த பிற சாலைகளின் வடிவமைப்பு, கட்டடம், பராமரிப்பு தரநிலைகள் குறித்த விதிகளும் ஆறு மாதங்களுக்குள் உருவாக்கி அறிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -