வாயு வஜ்ரா பஸ் தகவல்கள் அறிய புதிய இணையதளம்
பெங்களூரு: கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும், 'வாயு வஜ்ரா' பஸ்களில் பயணிப்போருக்கு பஸ் புறப்படும் நேரம், கட்டணம், நிறுத்தங்கள் உட்பட, அனைத்து விபரங்களும் விரல் நுனியில் கிடைக்கும் வகையில், பி.எம்.டி.சி., 'கியாஸ்' என்ற வலை தளம் வழிகாட்டுகிறது.இது தொடர்பாக, பி.எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு, வாயு வஜ்ரா பஸ்களில் பயணிக்கும் மக்களின் வசதிக்காக, பி.எம்.டி.சி., புதிதாக 'கியாஸ்' என்ற வலை தளம் வடிவமைத்துள்ளது. https//kias.mybmtc.comஎன்ற வலைதளம் மூலம், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் வெளியே, பி.எம்.டி.சி., நிலையத்தின் எந்த பிளாட்பாரமில், எந்த வழித்தடத்துக்கு செல்லும் பஸ் உள்ளது, பஸ் எத்தனை மணிக்கு புறப்படும், எந்த நிறுத்தங்களின் வழியாக செல்லும், கட்டணம் எவ்வளவு என்ற விபரங்களை, எளிதாக தெரிந்து கொள்ளலாம்.வாயு வஜ்ரா பஸ்களின் அட்டவணையும், கியாசில் இருக்கும். பஸ் எந்த நிறுத்த்தில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதனால் பயணியர் அந்தந்த பஸ் நிலையத்துக்கு வந்து, பஸ்களில் பயணிக்க உதவியாக இருக்கும்.விமான நிலையத்தின் டெர்மினல் - 2லிருந்து புறப்படும் வாயு வஜ்ரா பஸ்கள் செல்லும் வழித்தட விபரங்களும் கூட, கூகுள் மேப் மூலமாக விவரிக்கப்பட்டுள்ளது. வாயு வஜ்ரா பஸ்களில் பயணிக்கும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால் புகார் அளிக்கவும், ஆலோசனை கூறவும் கியாசில் வாய்ப்புள்ளது.உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் பயணியர், தேவையான தகவல் தெரிந்து கொள்ள முக்கியமான மெட்ரோ நிலையங்களின் அதிகாரிகளின் மொபைல் போன் எண்களும், கியாசில்இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.