உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் வழக்கில் கைதான டி.எஸ்.பி., மீது அடுத்த புகார்!

பாலியல் வழக்கில் கைதான டி.எஸ்.பி., மீது அடுத்த புகார்!

..மேலும் பல பெண்களுக்கு தொல்லை தந்தாரா?துமகூரு மாவட்டம், மதுகிரி போலீஸ் நிலையத்திற்கு, பாவகடாவை சேர்ந்த ஒரு இளம் பெண், நில முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க வந்தார். அப்பெண்ணை பார்த்தவுடன், மதுகிரி டி.எஸ்.பி., ராமச்சந்திரப்பா, 58, அவர் மீது ஆசைப்பட்டார். அவரை அழைத்து, 'உன் வழக்கில் நான் நீதி வாங்கி தருகிறேன். நான் அழைக்கும் போது போலீஸ் நிலையத்திற்கு வர வேண்டும்' என கூறி உள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து, அங்கிருந்து சென்று உள்ளார்.

கழிப்பறை

கடந்த 2ம் தேதி, அந்த பெண்ணை விசாரணைக்கு வருமாறு டி.எஸ்.பி., அழைத்து உள்ளார். அந்த பெண்ணும் அலுவலகத்திற்கு சென்றார். இளம்பெண் அறைக்குள் வந்ததும், டி.எஸ்.பி., அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். அறையில் கண்காணிப்பு கேமரா இருந்ததால், 'உன்னிடம் ஒரு விஷயம் கூற வேண்டும்' என கூறி, அலுவலகத்தில் உள்ள கழிப்பறைக்கு அழைத்து சென்றார். அங்கு, அவரை கட்டிப்பிடித்து, தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இந்த வேளையில், கழிப்பறை ஜன்னலில் இருந்து யாரோ ஒருவர், இதை மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்ததை பார்த்து டி.எஸ்.பி., அதிர்ந்து போனார். அந்த நபரை பிடிக்க முற்பட்டார். ஆனால், அவர் தப்பி விட்டார். சிறிது நேரத்தில், அந்த வீடியோ இணையம் முழுதும் பரவியது.இதை பார்த்த அப்பெண், உடனடியாக மதுகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இச்சம்பவம் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதுவும், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் சொந்த மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்து உள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

'சஸ்பெண்ட்'

இதையடுத்து, டி.ஜி.பி., அலோக் மோகன், டி.எஸ்.பி., ராமசந்திரப்பாவை, 'சஸ்பெண்ட்' செய்தார். கடந்த 3ம் தேதி, கூடுதல் எஸ்.பி., விசாரித்து ராமசந்திரப்பாவை கைது செய்தார். அவரை, மதுகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, துமகூரு மாவட்ட சிறையில் அடைத்தனர்.இப்பிரச்னை வெளியில் தெரிந்தவுடன், அவரால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பெண் குற்றம் சாட்டி உள்ளார். டி.எஸ்.பி., ராமச்சந்திரப்பா தன்னிடமும் தவறாக நடந்து கொண்டார் என துமகூரை சேர்ந்த ஒரு பெண் குற்றம் சாட்டி உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், நில பிரச்னை தொடர்பாக, துமகூரு டவுன் போலீஸ் நிலையத்திற்கு அவர் சென்று புகார் செய்தார். சில நாட்கள் கழித்து, அந்த பெண்ணிடம் பேசிய டி.எஸ்.பி., ராமச்சந்திரப்பா நீதி வாங்கி தருவதாக கூறி உள்ளார்.

வீடியோ கால்

சில நாட்களுக்கு பின், அந்த பெண்ணின் மொபைல் போனுக்கு 'வீடியோ கால்' செய்து உள்ளார். அப்போது அவரது பிரச்னைகளை கேட்டவர், 'கவலைப்பட வேண்டாம்; நான் இருக்கிறேன்; விசாரணைக்கு அழைக்கும் போது மட்டும் அலுவலகம் வந்தால் போதும்' என கூறி நம்ப வைத்து உள்ளார்.அவர் கூறியபடி மறுநாள், அவரை அலுவலகத்திற்கு அழைத்து உள்ளார். டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு, தன் கணவருடன் அப்பெண் சென்றுள்ளார். இதனால், கடுப்பான டி.எஸ்.பி., அப்பெண்ணை மட்டும் தன் அறைக்குள் வருமாறு அழைத்து உள்ளார். அவரிடம் நைசாக பேச்சு கொடுத்த டி.எஸ்.பி., 'கவலைப்பட வேண்டாம்' என, அவரது தோள் பட்டையில் கை வைத்து உள்ளார். 'உன்னிடம் தனியாக பேச வேண்டும்' என கழிப்பறைக்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு வைத்து, பெண்ணின் கன்னத்தில் கை வைத்தார்; தகாத முறைகளில் நடந்து கொண்டார்.

மிரட்டல்

இதனால், அந்த பெண் அழ துவங்கி விட்டார். அவரை சமாதானப்படுத்தி, 500 ரூபாய் கொடுத்து அனுப்பி உள்ளார். 'இந்த சம்பவம் பற்றி வெளியில் கூற கூடாது' என மிரட்டியுள்ளார். பீதியடைந்த அப்பெண், செய்வதறியாது சென்று விட்டார். சில நாட்களுக்கு பின், டி.எஸ்.பி.,யிடம் இருந்து அழைப்பு வந்தது. இம்முறை, அப்பெண் உஷாராக, தனது கணவருடன் டி.எஸ்.பி., அறைக்குள் சென்றார். இருப்பினும், டி.எஸ்.பி., தனது குறுக்கு புத்தியை உபயோகப்படுத்தி, அப்பெண்ணின் கணவரிடம் ரூபாய் கொடுத்து, கடைக்கு சென்று பொருள் வாங்கி வருமாறு கூறி உள்ளார். அதிகாரி கூறியதால், அவரும் அறையில் இருந்து வெளியே சென்றுள்ளார். தனியாக இருந்த பெண்ணிடம், மீண்டும் தன் மன்மத லீலையை துவங்க டி.எஸ்.பி., முயற்சி செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், 'நீங்கள் நினைப்பது போன்ற பெண் நான் இல்லை' என கூறி அழ ஆரம்பித்து விட்டார். அந்த சமயத்தில் மற்றொரு அதிகாரி, டி.எஸ்.பி., அறைக்குள் வரவே, இந்த சமயத்தை பயன்படுத்தி அப்பெண், அறையில் இருந்து தப்பிவிட்டார். அதன்பின் மீண்டும் அலுவலகம் பக்கம் செல்லவில்லை.இவர் கூறியதை பார்த்தால், ராமசந்திரப்பா இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையில் விளையாடி இருப்பார் என தெரியவில்லை. அவரிடம் நேர்மையாக விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை