சாலை பள்ளங்களை மூடுவதில் அதிகாரிகள் அலட்சியம்
பெங்களூரு; பெங்களூரில் கன மழையால், சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூடும் பணிகளை மேற்கொள்ள வேண்டிய மாநகராட்சி, ஏதேதோ காரணங்களை கூறி, காலம் கடத்துவதால் பொது மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.பெங்களூரில் ஏற்கனவே சாலை பள்ளங்களால், மக்கள் அவதிப்படுகின்றனர். மழை பெய்ததால், பள்ளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. துணை முதல்வர் சிவகுமார், நகரை ஆய்வு செய்த போது, சாலை பள்ளங்களை கவனித்தார். மக்களும் புகார் அளித்தனர். எனவே பள்ளங்களை மூட, மாநகராட்சி அதிகாரிகளுக்கு காலக்கெடு நிர்ணயித்தார்.சிவகுமாரின் உத்தரவுக்கு பின், அதிகாரிகள் பெயரளவுக்கு சில பள்ளங்களை மூடினர். நகரில் மீண்டும் மழை அதிகரித்ததால், ஆயிரக்கணக்கான புதிய பள்ளங்கள் உருவாகியுள்ளன. வாகன பயணியர் அவதிப்படுகின்றனர். சமீபத்தில் மூடப்பட்ட பள்ளங்களின் தார் பெயர்ந்து வந்துள்ளது. இவற்றை சரி செய்ய வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள், அலட்சியம் காட்டுகின்றனர்.தேவையற்ற காரணங்களை கூறி, நாட்களை கடத்துகின்றனர். சமீபத்தில் சாலை பள்ளங்களை மூடும் பணிகளை நடத்திய ஒப்பந்ததாரர்கள், தரமான பணிகளை செய்யவில்லை. அந்த பள்ளங்களின் தார் பெயர்ந்துள்ளது. இதை அவர்களே சரி செய்ய வேண்டும். ஆனால் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் வேலை வாங்குவதிலும் அக்கறை காட்டவில்லை.இது குறித்து, பொது மக்கள் கேள்வி எழுப்பினால், மாநகராட்சி மத்திய அலுவலக அதிகாரிகள், எட்டு மண்டலங்களின் அதிகாரிகள் மீதும், மண்டல அலுவலக அதிகாரிகள், மத்திய அலுவலக அதிகாரிகள் மீதும் பரஸ்பரம் குற்றம்சாட்டி கொண்டு நடமாடுகின்றனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கடந்த மாதம் 14,000க்கும் மேற்பட்ட சாலை பள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. அந்த பள்ளங்கள் பாழாகவில்லை. அதன் பக்கத்தில் பள்ளங்கள் உருவாகியுள்ளன. கோல்டு மிக்ஸ் பயன்படுத்தி, சாலை பள்ளங்கள் மூடப்பட்டன. இத்தகைய நடைமுறையில் மூடப்பட்ட பள்ளங்களின் தார் பெயர்ந்து போகவில்லை.பிரதான சாலைகளுக்கு, தார் போட திட்டம் வகுத்துள்ளோம். நவம்பரில் 459 கி.மீ., தொலைவிலான சாலைகளின் மேற்பகுதியை அகற்றி, புதிதாக தார் பூசப்படும். இதற்காக 660 கோடி ரூபாய் செலவிடப்படும். அதன்பின் சாலைகளின் தரம் உயரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.