மின்சார கம்பங்களில் கேபிள்கள் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு
பெங்களூரு: ''பெஸ்காம் மின் கம்பங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 'கேபிள்'களை அகற்ற வேண்டும்,'' என, பெஸ்காம் அதிகாரிகளுக்கு, மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டார்.பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாநகராட்சி மற்றும் பெஸ்காம் அதிகாரிகளுடன், துஷார் கிரிநாத் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது:தலைக்கு மேல் செல்லும் கேபிள் ஒயர்கள் அறுந்து தொங்குவதும்; பெஸ்காம் மின் கம்பத்தில் கட்டி, சுற்றிவிடுவதும் அதிகரித்து வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விதிகளை மீறி, கேபிள் ஒயர்கள் சென்றால், நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்.'டெண்டர் ஷுயர்' பணிகள் நடந்த சாலைகளில் கேபிள்கள் தெரிந்தால், எந்தவித அறிவிப்பும் இன்றி, அகற்றப்படும். அதுபோன்று, டெண்டர் ஷுயர் சாலைகளில், மின்சார கம்பம் அமைக்க, மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் குப்பை அகற்ற, கூடுதல் காம்பாக்டர் வாகனங்கள் பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.