பீஹாரில் 6 எம்.எல்.ஏ.,வுக்கு ஒருவர் மந்திரி: தே.ஜ., புது பார்முலா!
பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, புதிய அரசு அமைப்பதற்கான பணிகள் தீவிரமடைந்து உள்ளன. அதன்படி, ஆறு எம்.எல்.ஏ.,வுக்கு ஒருவரை அமைச்சராக்கும் புது பார்முலாவை, தே.ஜ., கூட்டணி வகுத்துள்ளது. துணை முதல்வர் பதவி, பா.ஜ., - லோக் ஜனசக்தி கட்சிகளுக்கு இறுதி செய்யப்பட்டு உள்ளதால், நிதிஷ் குமாரே மீண்டும் முதல்வராவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பீஹாரில், 243 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 202 இடங்களை கைப்பற்றி ஆளும் தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 101 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ., 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், 85 இடங்களில் வென்றுள்ளது. மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு, 19 இடங்கள் கிடைத்தன.மீண்டும் ஆட்சி:
மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்ஜியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஐந்து இடங்களையும், ராஜ்யசபா எம்.பி., உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா நான்கு இடங்களையும் கைப்பற்றின.அதே சமயம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய, 'மஹாகட்பந்தன்' கூட்டணி இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இந்தக் கூட்டணி மொத்தம் 34 இடங்களில் மட்டுமே வென்றது. இதைத் தொடர்ந்து, பீஹாரில் தே.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.இந்த முறை முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை விட, பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதனால், நிதிஷ் குமாருக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படுமா அல்லது பா.ஜ., தரப்பில் முதல்வர் அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்தச் சூழலில், புதிதாக ஆட்சி அமைப்பதற்கான முதற்கட்ட பேச்சுகள் டில்லியில் நடந்தன. பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளனர்.அப்போது, ஆறு எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி என்ற விகிதத்தில், அமைச்சரவைக்கான புதிய பார்முலா முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு கூட்டணி கட்சிகளும் ஒப்புக் கொண்டதால், பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரம் அடைந்து உள்ளன.எப்போது பதவியேற்பு?
அதனால், வரும் 19 அல்லது 20ம் தேதியன்று, புதிய அரசின் பதவியேற்பு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, நிதிஷ் குமாரையே மீண்டும் முதல்வராக்க பெரும்பாலான கூட்டணி கட்சிகள் விரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.அதை உறுதிப்படுத்துவது போல, பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா, பாட்னாவில் நேற்று நிதிஷ் குமாரை சந்தித்தார்; தேர்தல் வெற்றிக்காக பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதனால், முதல்வர் பதவி மீண்டும் நிதிஷ் குமாருக்கும், பா.ஜ., லோக் ஜனசக்தி கட்சிகளுக்கு, தலா ஒரு துணை முதல்வர் பதவியும் வழங்கப்படலாம் என தெரிகிறது.பதவியேற்பு விழாவில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், இந்தக் கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
யாருக்கு எத்தனை அமைச்சர்கள்?
பீஹாரில் ஆறு எம்.எல்.ஏ.,வுக்கு ஒருவரை அமைச்சராக்கும் புது பார்முலா கொண்டு வரப்பட்டுள்ளது. அதே சமயம், சட்டசபை மற்றும் பார்லி., விதிகளின்படி மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில், 15 சதவீதம் பேர் மட்டுமே அமைச்சர்களாக முடியும். அதை வைத்து பார்த்தால், 36 பேரை அமைச்சராக்க முடியும். இந்த விதிகளுக்கு ஏற்பவும், தே.ஜ., கூட்டணியின் பார்முலா படியும், 89 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட பா.ஜ.,வுக்கு 15 அல்லது 16 அமைச்சர்கள் கிடைக்கலாம். 85 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 14 அமைச்சர்களும், 19 எம்.எல்.ஏ.,க்களை கொண்டுள்ள சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு மூன்று அமைச்சர் பதவிகளும் கிடைக்கலாம். மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஜ்யசபா எம்.பி., உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சாவுக்கு, தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதியை மடைமாற்றிய முதல்வர்: பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
''பீஹார் சட்டசபை தேர்தலில், உலக வங்கியின் 14,000 கோடி ரூபாய் நிதியை மடைமாற்றியே நிதிஷ் குமார் அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது,'' என, தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: பீஹார் அரசுக்கு தற்போது 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது. இதற்காக நாளொன்றுக்கு, 63 கோடி ரூபாய் வட்டியாக செலுத்தி வருகிறது. இதனால், கஜானா காலியாகி விட்டது. எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. பீஹாரில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்வதற்காக, உலக வங்கியிடம் இருந்து 21,000 கோடி ரூபாய் நிதி வந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், அந்த நிதியில் இருந்து 14,000 கோடியை எடுத்து, மகளிர் வங்கி கணக்குகளில் தலா, 10,000 ரூபாயை நிதிஷ் அரசு செலுத்தியுள்ளது. ஒருவேளை இந்த தகவல் தவறாக இருந்தால், என்னை மன்னித்து விடுங்கள்; உண்மையாக இருந்தால், இதுபற்றி கேள்வி எழுப்ப வேண்டும். லாலு பிரசாத் யாதவ் தலைமையில் எங்கே மீண்டும் காட்டாட்சி வந்துவிடுமோ என்ற அச்சத்தால் தான், தே.ஜ., கூட்டணிக்கு மக்கள் ஓட்டளித்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.