தலிபான் அமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பால் சர்ச்சை: எதிர்க்கட்சிகள் கண்டனம்; மத்திய அரசு விளக்கம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:டில்லியில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி நடத்திய பத்திரிகையாளர் கூட்டத்தில், பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், 'இந்த விவகாரத்தில் அரசின் பங்கு ஏதும் இல்லை' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. தடை விதித்தது முழு உடலை மறைக்கும் அளவுக்கு ஆடை அணிய வேண்டும், வீட்டை விட்டு வெளியே சென்று பணியாற்றக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. சமீபத்தில் கூட பெண்கள் எழுதிய சில புத்தகங்களுக்கு, தலிபான் அரசு தடை விதித்தது. இந்நிலையில், டில்லி வந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி, பத்திரிகையாளர்களை நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையானது. 'பெண்களை போற்றும் இந்தியா போன்ற நாட்டில், இப்படி பாலின பாகுபாட்டுடன் ஒரு நிகழ்ச்சி நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது' என, எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து காங்., - எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் கூறியதாவது: ஒரு பொது நிகழ்ச்சியில் பெண் நிருபர்கள் பங்கேற்பதற்கு அனுமதி மறுத்ததன் மூலம், அவர்களுக்கான உரிமையை பெற்று தருவதில், மத்திய அரசு பலவீனமடைந்து விட்டதாக தெரிகிறது. சமமான உரிமை நம் நாட்டில் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சமமான உரிமை இருக்கிறது. பாலின பாகுபாடு தொடர்பான இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? அப்படியெனில், 'பெண் சக்தி' என அவர் முழக்கமிடுவது, வெற்று குரலா? இவ்வாறு அவர் கூறினார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என, காங்., - எம்.பி., பிரியங்காவும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: மும்பையில் உள்ள ஆப்கானிஸ்தான் துாதரகம் தான் அந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கான அழைப்பிதழை வெளியிட்டது. அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிருபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பிதழ் பெற்றவர்கள் தான் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆப்கன் துாதரகம் அமைந்திருக்கும் பகுதி, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசின் பங்கு ஏதும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆப்கன் வெளியுறவு அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட உடன், ஆண் பத்திரிகையாளர்கள், அந்த சந்திப்பை புறக்கணித்திருக்க வேண்டும். சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,