கும்பமேளா பற்றி பேச அனுமதி மறுப்பு லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி
கும்பமேளா நிகழ்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வாசித்ததும், தங்களையும் அது குறித்து பேச அனுமதிக்க வேண்டுமென எதிர்க்கட்சியினர் வலியுறுத்தவே, அதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்து, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அலுவல்களை தொடர முடியாமல் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.லோக்சபாவில் நேற்று மஹா கும்பமேளா குறித்து அறிக்கை வாசித்து பிரதமர் மோடி பேசியதாவது;பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்தியதற்காக பொதுமக்களுக்கும், நிர்வாகத்திற்கும் நன்றி. மழையை பூமிக்குக் கொண்டுவர கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை அனைவரும் அறிவோம். பிரமாண்டமான கும்பமேளாவை நடத்துவதற்கும், இதேபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை செங்கோட்டையிலிருந்து வலியுறுத்தினேன். கும்பமேளா வடிவத்தில் அந்த கூட்டு முயற்சியின் மகத்துவத்தை உலக நாடுகள் பார்த்தன. பாரதத்தின் மிகப்பெரிய பாரம்பரியம் மற்றும் பெருமையை கும்பமேளா வாயிலாக இந்த உலகமே பார்த்தது. தேசத்தின் மனசாட்சி விழிப்படைந்துள்ளது என்பதையே, இந்த கும்பமேளாவின் பிரமாண்டம் பிரதிபலித்தது. நம் பலத்தையும், திறமையையும் குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு வலிமையான பதிலடி தரப்பட்டுள்ளது. இது ஒரு நிகழ்வு அல்ல. வெவ்வேறு பகுதிகளிலிருந்து வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள், ஒரு பயனுள்ள விஷயத்துக்காக கூடி, வேற்றுமையில் ஒற்றுமை என்பதை காட்சிப்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், கும்பமேளா குறித்து பேச வாய்ப்பு கேட்டார். அனுமதி மறுக்கப்பட்டது. ''பிரதமர் அறிக்கை வாசித்தால் , அதன்பின் விதிகளின்படி அது குறித்து கேள்வி எழுப்பவோ, பேசவோ அனுமதி இல்லை,'' என்று சபாநாயகர் ஓம்பிர்லா கூறவே, சபையில் ரகளை வெடித்தது. இதனால் சபையின் அலுவல்கள் பாதிக்கப்பட்டு, நாள் முழுதும் சபை ஒத்திவைக்கப்பட்டது. மஹா கும்பமேளா நம் வரலாறு மற்றும் பாரம்பரியம். பிரதமரின் உரையை வரவேற்று பேசவே விரும்பினேன். கும்பமேளாவில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, பிரதமர் தன் உரையில் அஞ்சலி செலுத்தத் தவறிவிட்டார். -ராகுல், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர்- நமது டில்லி நிருபர் -