உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 25 பேர் உயிரிழந்த கோவா இரவு விடுதியின் உரிமையாளர்கள் ஓட்டம்: இண்டர்போல் உதவியை நாடுகிறது போலீஸ்

25 பேர் உயிரிழந்த கோவா இரவு விடுதியின் உரிமையாளர்கள் ஓட்டம்: இண்டர்போல் உதவியை நாடுகிறது போலீஸ்

பனாஜி: கோவாவில் நடந்த தீவிபத்தில் 25 பேர் உயிரிழந்த இரவு விடுதியின் உரிமையாளர்கள் இரண்டு பேர் தாய்லாந்துக்கு தப்பியோடியுள்ளனர். விபத்து நடந்த மறுநாள் அவர்கள் தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது.கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள பாகா கடற்கரை பகுதியில் 'பிர்ச் பை ரோமியோ' லேன்' என்ற இரவு விடுதி செயல்பட்டு வருகிறது. ஓராண்டுக்கு முன் துவக்கப்பட்ட இந்த விடுதியில் வார இறுதி என்பதால், இந்த விடுதியில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட ஏரளமானோர் நேற்று முன்தினம் குவிந்தனர். 100க்கும் மேற்பட்டோர் முதல் தளத்தில் நடனமாடிக் கொண்டிருந்தனர். அங்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது. இந்த விபத்தில் உடல் கருகியும், மூச்சுத் திணறியும் 25 பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டில்லியில் உள்ள அந்த விடுதியின் உரிமையாளர்களான கவுரவ் மற்றும் சவுரப் லுத்ரா இருவரும் வீட்டில் இல்லை. இதனையடுத்து இருவருக்கும் எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், அதில் குறிப்பிடப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு விமானம் அல்லது துறைமுகங்கள் மூலம் செல்ல முடியாது.இதனைத் தொடர்ந்து, இருவரும், விபத்து நடந்த மறுநாள்( நேற்று) அதிகாலை 5:30 மணிக்கு தாய்லாந்தின் புக்கெட் நகருக்கு இண்டிகோ விமானம் மூலம் தப்பிச் சென்றதை மும்பை விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்தியாவில் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டு இருந்தாலும், வெளிநாடுகளுக்கான சேவை பாதிக்கப்படாதது அவர்கள் வெளிநாடுகளுக்கு ஓட வாய்ப்பு கிடைத்தது. போலீஸ் விசாரணையில் இருந்து தப்பவே அவர்கள் தப்பி ஓடியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து அவர்களை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாட சிபிஐ அதிகாரிகளின் உதவியை கோவா போலீசார் நாடியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி