மகளுடன் பழகியவரை தட்டி கேட்ட பெற்றோர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே
மூணாறு,:மகளுடன் பழகியதை தட்டிக்கேட்க சென்ற பெற்றோர் முகத்தில், மாணவர், 'பெப்பர் ஸ்பிரே' அடித்த சம்பவத்தில் பெற்றோர், ஏழு மாணவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டது.கேரள மாநிலம், மூணாறு அருகே பைசன்வாலி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில், மேல்நிலை பிரிவில் படிக்கும் மாணவருக்கு சக மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அதை மாணவியின் பெற்றோர், சம்பந்தபட்ட மாணவரிடம் தட்டிக்கேட்க நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றனர்.அப்போது, பள்ளி அருகே பயணியர் நிழற்குடை பகுதியில் நின்ற மாணவருக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த மாணவர், பெப்பர் ஸ்பிரேயை, மாணவியின் பெற்றோர் முகத்தில் அடித்தார். அது, அருகில் பஸ்சுக்கு காத்திருந்த மாணவர்கள் முகத்திலும் விழுந்தது. இதில், பெற்றோர், ஏழு மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்றனர்.மாணவியின் தந்தை தாக்கியதாக சம்பந்தபட்ட மாணவர் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இரு தரப்பினர் மற்றும் மாணவர்கள் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும் என, ராஜாக்காடு போலீசார் தெரிவித்தனர்.