சுப்ரீம் கோர்ட் வளாகத்திற்குள் போட்டோ, வீடியோ எடுக்க தடை
உச்ச நீதிமன்ற வளாகத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, உச்ச நீதிமன்ற பாதுகாப்பு குழு நேற்று வெளியிட்ட சுற்றறிக்கை: உச்ச நீதிமன்றத்தில், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் பேட்டி எடுப்பது, நேரலை செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். உயர் பாதுகாப்பு வளையப் பகுதிகளுக்குள் புகைப்படங்கள் எடுக்கவும் வீடியோ பதிவு செய்யவும் முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க பயன்படுத்தப்படும், 'கேமரா செல்பி ஸ்டிக்' போன்ற உபகரணங்களை எடுத்து வரவும் தடை விதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகளை மீறினால், உச்ச நீதிமன்றத்தின் உயர் பாதுகாப்பு பகுதிகளுக்குள் ஊடகத்தினர் நுழைய ஒரு மாதம் தடை விதிக்கப்படும். உச்ச நீதிமன்ற ஊழியர்கள் இந்த விதிமீறல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் அதிகாரம் பணியமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -