உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மும்பை பாணியில் டில்லியில் தாக்குதல் நடத்த திட்டம்?

 மும்பை பாணியில் டில்லியில் தாக்குதல் நடத்த திட்டம்?

புதுடில்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை போல, டில்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டிய தகவல் தெரியவந்துள்ளது. இது குறித்து, விசாரணை அதிகாரிகள் கூறியதாவது: மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008 நவ., 26ல், 12 இடங்களில் தாக்குதல் நடத்தியது போல, தலைநகர் டில்லியிலும், செங்கோட்டை, இந்தியா கேட், கான்ஸ்டிடியூஷன் கிளப், கவுரி சங்கர் கோவில் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த இந்த பயங்கரவாத கும்பல் சதித்திட்டம் தீட்டி உள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், வணிக வளாங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இது தவிர, குருகிராம், பரிதாபாத் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்த, 200க்கும் மேற்பட்ட ஐ.இ.டி., எனப்படும் சக்திவாய்ந்த மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டை இந்த கும்பல் தயாரித்துள்ளது. டில்லியில் தாக்குதல் நடத்த, கடந்த ஜனவரியில் இருந்து திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்- - இ - -முகமது பயங்கரவாத அமைப்புடன், இந்த கும்பலுக்கு நேரடி தொடர்பு உள்ளது. அந்த அமைப்பின் வழிகாட்டுதலின்படியே, எந்த சந்தேகமும் எழாமலிருக்க, மதவாத சிந்தனை உடைய ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர்கள் இந்த சதித்திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளனர். டாக்டர்கள் என்ற போர்வையில் டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் வலம் வந்த அவர்கள், பரிதாபாதில் நெட்வொர்க்கை அமைத்து, தாங்கள் தங்கியிருந்த வாடகை வீடுகளில் வெடி பொருட்களை சேமித்து வைத்திருந்தனர். மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவும் இவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த கும்பலைச் சேர்ந்த சிலரை கைது செய்துள்ளோம். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விரைவில் கைது செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர். சிவப்பு நிற கார் கண்டுபிடிப்பு செங்கோட்டையில் வெடித்து சிதறிய, 'ஹூண்டாய்' நிறுவனத்தின், 'ஐ20' காரை ஓட்டிய புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபிக்கு சொந்தமான, 'போர்டு' நிறுவனத்தின் சிவப்பு நிற 'ஈகோ ஸ்போர்ட்' காரை, ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள கண்டாவாலி கிராமத்தில் போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். கார் நிறுத்தப்பட்டிருந்த வீடு, அல் பலாஹ் பல்கலையில் இருந்து, 12 கி.மீ., துாரத்தில் உள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர், உமர் நபியின் நண்பர் என, கூறப்படுகிறது. டி.எல்.10 சி.கே. 0458 என்ற பதிவு எண்ணைக் கொண்ட அந்த காரை, போலி ஆவணங்கள் வாயிலாக உமர் நபி வாங்கியது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, உமர் நபி கார் வாங்கிய, 'ராயல் கார் பிளாசா' ஷோ ரூம் உரிமையாளர் அமித் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ