பீஹாரில் தொழில் செய்ய விரும்பும் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000; அறிவிப்பு வெளியிட்டார் பிரதமர்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹாரில், பெண்களுக்கு சுய தொழில் துவங்க நிதியுதவி அளிக்கும் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவங்கி வைத்தார். அதன்படி, 75 லட்சம் பெண்களுக்கு முதற்கட்டமாக, தலா 10,000 ரூபாய் நிதியுதவி அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 243 தொகுதிகளுக்கு நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. தேர்தலை மனதில் வைத்து, முதல்வர் நிதிஷ் குமார் பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வருகிறார். நிதி ஒதுக்கீடு
அந்த வகையில், பீஹாரில் உள்ள பெண்கள் சுய தொழில் துவங்க, முதல்வரின் மகளிர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படும் என, சமீபத்தில் அவர் அறிவித்தார். குடும்பத்திற்கு ஒரு பெண் என்ற அடிப்படையில், 75 லட்சம் பெண்களுக்கு தலா, 10,000 ரூபாய் வழங்க, 7,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை, விவசாயம், கால்நடை வளர்ப்பு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, தையல், நெசவு, சிறு தொழில்கள் உட்பட தாங்கள் விரும்பும் தொழிலுக்கு பெண்கள் பயன்படுத்த முடியும். தொழில் துவங்கி திறம்பட செயலாற்றும் பெண்களுக்கு, அடுத்த கட்டங்களாக 2 லட்சம் ரூபாய் வரை மானிய உதவி வழங்கப்படும். பெண்களை சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பீஹாரில், முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை, டில்லியில் இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். தலைநகர் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் நிதிஷ் குமார், பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்திட்டத்தின்படி, 75 லட்சம் பெண்களுக்கு சுய தொழில் துவங்க, தலா 10,000 ரூபாய் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:
பீஹாரில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியில் இருந்த போது, எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடியது. முன்னேற்றம்
குடும்ப அரசியலால் மாநிலம் மிகவும் பின்தங்கியது. சரிவர சாலைகள் இல்லை; மேம்பாலங்கள் இல்லை. அடிப்படை வசதிகள் கூட இல்லாததால், மக்கள் குறிப்பாக கர்ப்பிணியர் மிகவும் அவதிப்பட்டனர். இந்த மோசமான நிலையில் இருந்து, பீஹார் மக்களை தே.ஜ., கூட்டணி காப்பாற்றியது. எங்கள் கூட்டணி அரசின் கீழ், பீஹார் வேகமாக முன்னேறி வருகிறது. சட்டம் - ஒழுங்கு நிலையாக உள்ளது. மக்கள் தற்போது மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர். ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருப்பதை பீஹார் பெண்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். தே.ஜ., கூட்டணி பெண்களுக்கு அதிகாரமளிக்க பாடுபடுகிறது. விரைவில் நாட்டிலேயே அதிகபட்ச எண்ணிக்கையிலான லட்சாதிபதி சகோதரிகள், பீஹாரில் தான் இருப்பர். பீஹார் பெண்களுக்கு இப்போது இரண்டு சகோதரர்கள் உள்ளனர். ஒன்று,- நிதிஷ்; மற்றொன்று மோடி. அவர்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் இருவரும் அயராது பாடுபடுகிறோம். பெண்களை மையமாக வைத்து கொள்கைகளை அரசு உருவாக்கும் போது, அது சமூகத்தின் பிற பிரிவுகளுக்கும் பயன் அளிக்கிறது. உதாரணமாக, மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்தை இன்று ஒட்டுமொத்த உலகமே பார்க்கிறது. இது பெண்களின் வாழ்க்கையை மேம் படுத்தியுள்ளது. சவால்
ஒரு காலத்தில் கிராமத்தில் எரிவாயு இணைப்பு பெறுவது பெரிய சவாலாக இருந்தது. விறகு பயன்படுத்தியதால் தாய்மார்களும், சகோதரியரும் சமையலறையில் இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் கடும் அவதிப்பட்டனர். அதனால் சிலர் பார்வையை கூட இழந்தனர். இதிலிருந்து அவர்களை காப்பாற்ற ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு இணைப்புகளை வழங்கினோம். பெண்கள் முன்னேறும் போது ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.