மஹாராஷ்டிராவில் கொட்டிய மழை பிரதமர் மோடியின் புனே வருகை ரத்து
மும்பை, மஹாராஷ்டிராவின் மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. தண்டவாளத்தில் வெள்ளம் தேங்கியதால், மும்பை புறநகர் ரயில் சேவை பாதிப்படைந்தது. மேலும், மும்பை வரவேண்டிய 14 விமானங்கள் வேறு வழிதடத்தில் திருப்பி விடப்பட்டன.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. அன்று மாலையில் மட்டும் மும்பையின் பல பகுதிகளில், 5 மணி நேரத்தில் 10 செ.மீ., அளவுக்கு மழை பதிவாகியிருந்தது.இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து உடமைகளை அடித்துச் சென்றதால் மக்கள் பீதியடைந்தனர்.காட்கோபர் - அந்தேரி சாலை, கைரானி ரோடு உள்ளிட்ட சில இடங்களில் கழுத்தளவு வெள்ளம் பாய்ந்தோடியது. அந்தேரி புறநகர் பகுதியில் பாய்ந்தோடிய வெள்ளத்தில் மூழ்கி, 45 வயது பெண் உயிரிழந்தார்.தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி கிடந்ததால் மும்பை புறநகர் ரயில் போக்குவரத்து சில இடங்களில் பாதிக்கப்பட்டது. மத்திய வழித்தடத்தில் குர்லா - தானே நிலையங்கள் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மும்பை மட்டுமின்றி தானே, பால்கர், புனே, பிம்ப்ரி - சிஞ்ச்வாட்டிலும் கனமழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மும்பைக்கு, ரெட் அலெர்ட் எனப்படும் கனமழை எச்சரிக்கை நேற்றும் விடுக்கப்பட்டது. அது மட்டுமின்றி தானே பால்கர், ராய்கட் மாவட்டங்களுக்கும் நேற்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.இதையொட்டி, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு மும்பை மாநகராட்சி நேற்று விடுமுறை அறிவித்தது.இதற்கிடையே, நேற்று காலை 8:00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், மும்பையில் 11.78 செ.மீ., மழை பதிவாகிஇருந்தது. இந்நிலையில், புனேயில் மெட்ரோ ரயில் துவக்க விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்க இருந்தார். நேற்று முன்தினம் பெய்த கனமழையால் புனேயில் நேற்று நடைபெற இருந்த இடம் சேறும் சகதியுமாக காட்சியளித்ததாலும், நேற்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்ததாலும், பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேகவெடிப்புக்கு ஒருவர் பலி
ஹிமாச்சல் மாநிலத்தின் சிர்மர் மாவட்டத்தில், மேக வெடிப்பு காரணமாக நேற்று கனமழை பெய்தது. மோசமான வானிலையால், தேசிய நெடுஞ்சாலை உட்பட 26 சாலைகள் மூடப்பட்டன. பர்லோனி கிராமத்தில் வாட்டர் மில் இடிந்து விழுந்ததில் அருகில் இருந்த கடைகள் உள்ளிட்டவை இடிந்தன. இதில், இடிபாடுகளில் சிக்கி ரங்கி என்பவர் உயிரிழந்தார். கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.