புதுடில்லி: டில்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகள் பயன்படுத்தியது அம்மோனியம் நைட்ரேட்டை விட சக்திவாய்ந்த புதிய வெடிபொருளாக இருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் சோதனையில் தெரிய வந்திருக்கிறது.டில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பின் விசாரணை பல கோணங்களில் நடந்து வருகிறது. பயங்கரவாதிகள் பற்றிய பின்னணி விவரங்கள், அவர்கள் பயன்படுத்திய தகவல் தொடர்புகள், அவர்களின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் உதவி செய்தவர்கள் யார் என விசாரணை விரிவடைந்து வருகிறது.வேறு ஒரு கோணமாக, குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது என்ன வகையான வெடி பொருள் என்பதை தடயவியல் நிபுணர்கள் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் ஆய்வுகளில், குண்டுவெடிப்பானது அம்மோனியம் நைட்ரேட்டை விட சக்தி வாய்ந்த புதிய அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஒரு வெடிபொருளாக இருக்கலாம் என்பதை கண்டறிந்துள்ளனர்.குண்டுவெடிப்பில் பலியானவர்களின்(12 பேர் உயிரிழந்தாலும் வெடித்த போது மிக அருகில் இருந்தவர்களின்) ஆடைகள், அவர்கள் அருகில் இருந்த சில பொருட்களை தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கின்றனர். இவற்றில் வழக்கமான பயங்கரவாத குண்டுவெடிப்பின் போது, பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களின் தடயங்கள் எதுவும் காணப்படவில்லை.பலியானவர்களின் உடல்கள் மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டன. பலியானவர்களில் பெரும்பான்மையானவர்களின் காதுகளில் உள்ள செவிப்பறைகள் கிழிந்தும், நுரையீரல் வெடித்துச் சிதறியும் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்து இருக்கின்றனர். அதோடு, குண்டுவெடித்த போது மிக அருகில் இருந்தததால் அவர்களின் வயிற்று பகுதி கடுமையாக சேதம் அடைந்து இருந்ததும் தெரிய வந்து இருக்கிறது. குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்கள், வெடிப்பு நிகழ்ந்த மையப்புள்ளியின் மிக அருகில் இருந்ததை உறுதிப்படுத்தி உள்ளது.உடல்களை மேலும் பல விதமாக ஆய்வு செய்த போது, அதிக சக்தியுடன் குண்டு வெடித்ததால் அவர்கள் தூக்கிவீசப்பட்டு அருகில் உள்ள சுவர்கள் மீது மோதி பின்னர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களில் பல இடங்களில் எலும்பு முறிவுகள், தலையில் ஏற்பட்ட ஆழ்ந்த காயங்கள் இதை உறுதிப்படுத்தி இருக்கின்றன. உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையில் வழக்கமாக குண்டு வெடிப்பை அரங்கேற்றும் போது கிடைக்கப்பெறும் வெடி பொருட்களின் வேதிப்பொருட்கள் அல்லது துகள்கள் தென்படவில்லை. முதல் கட்ட ஆய்வுகளில், குறிப்பிட்ட வேதிப்பொருட்களுக்கு பதிலாக புதிய அல்லது முன்பை விட மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.மேலும், சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் அம்மோனியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் இருந்துள்ளது. அதே நேரத்தில், வெடிபொருள் தயாரிப்பின் போது அந்த அம்மோனியம் நைட்ரேட் வேறு ஒரு பொருளுடன் சேர்த்து கலக்கப்பட்டு உள்ளது. அந்த வேதிபொருள் என்ன என்பது உறுதியாக அடையாளம் காணப்படவில்லை.
அம்மோனியம் நைட்ரேட் என்பது என்ன?
அம்மோனியம் நைட்ரேட் என்பது எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது. பொட்டாசியம் குளோரேட், சல்பர் போன்ற இன்ன பிற ரசாயனங்களுடன் வினைபுரியும் போது அல்லது சேர்க்கும் போது வெடிபொருளாக உருமாறுகிறது. இத்தகைய வெடிபொருளைத் தான் பயங்கரவாத குழுக்கள் அல்லது இயக்கங்கள் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்துகின்றன.
அம்மோனியம் நைட்ரேட்டுடன் எரிபொருள் எண்ணெய்யை (இந்த குறிப்பிட்ட எண்ணெய் கச்சா எண்ணெயில் இருந்து பெறப்படும் பெட்ரோலிய பொருட்களின் கலவை; கப்பல் போக்குவரத்து, மின் உற்பத்தி, தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது) கலந்தால் வெகு விரைவில் தீப்பற்றி பெரும் சேதங்களை ஏற்படுத்தும் வெடி பொருளாக மாறும்.
இந்த அம்மோனியம் நைட்ரேட்டானது, விவசாயத்தில் நைட்ரஜன் உரமாகவும், கல்குவாரிகளில் பாறைகளை தகர்க்க குறிப்பிட்ட அளவிலும் பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாத இயக்கங்கள் ஆர்டிஎக்ஸ் வெடிபொருளுடன் அம்மோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தி வந்ததால், 45 சதவீதத்துக்கும் மேல் அம்மோனியம் நைட்ரேட் கொண்ட ரசாயனங்களை வெடிபொருள் என்ற பட்டியலில் மத்திய அரசு 2011ம் ஆண்டே வகைப்படுத்தி இருந்தது. அதன் பின்னர் 2015ம் ஆண்டில் இந்த வேதிபொருளை இறக்குமதி செய்யவும் கடும் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டன.