வாகன சோதனைக்கு காரை மறித்த போலீசுக்கு சரமாரி அடி, உதை
இந்துார்: மத்திய பிரதேசத்தில், வாகன சோதனைக்காக காரை வழிமறித்த போலீஸ் எஸ்.ஐ.,யை பிணைய கைதியாக பிடித்து வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் உள்ள பான்கங்கா பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை, சப் -இன்ஸ்பெக்டர் ஈக்கா வழிமறித்தார். காரை நிறுத்தியதும், அதில் இருந்து இறங்கிய நான்கு பேர் கும்பல், சப் - இன்ஸ்பெக்டரை மிரட்டி, 'உன் பெயர் என்ன?' என கேட்டபடி சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை, அவர்கள் வந்த காரில் ஏறும்படி மிரட்டினர். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் எஸ்.ஐ., ஈக்காவை தாக்கிய இருவரை கைது செய்து விசாரித்தனர். அவர்களில் ஒருவர், ஜோபாத் சிறையில் வார்டனாக இருப்பது தெரியவந்தது. விடுமுறையில் இந்துார் வந்த அவர், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுஉள்ளார்.அவருடன் வந்த மற்ற இருவர் அரவிந்த் மற்றும் விகாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் நால்வர் மீதும் பாரதிய நியாய சங்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.