காரின் மீது நின்றபடி பயணம் மூவருக்கு போலீஸ் எச்சரிக்கை
பெங்களூரு : பெங்களூரில் காரின் பின்னால் நின்றபடி பயணித்தவர்கள் மற்றும் டாக்சி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இரு சக்கர வாகனங்களில் வீலிங், சாகசம் செய்து வரும் இளைஞர்களுக்கு கடிவாளம் போடுவதற்காக, வெளிவட்ட சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனாலும், அவர்கள் கண்களில் மண்ணை துாவி விட்டு, வீலிங்கில் ஈடுபடுகின்றனர். மற்ற வாகனங்களில் செல்வோர் தங்கள் மொபைல் போனில் படம் பிடித்து, சமூக வலைதளம் அல்லது போலீசாருக்கு அனுப்பி வைக்கின்றனர். இதன் அடிப்படையில் வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், காரின் பின் பகுதியில் உள்ள, 'கிராஷ் கார்டில்' நின்றபடி இருவர் பயணிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதன் அடிப்படையில், காமாட்சிபாளையா போக்குவரத்து போலீசார் விசாரித்து வந்தனர். பிப்., 8 ம் தேதி காலை 10:30 முதல் 10:45 மணிக்குள், கோரகுன்டேபாளையாவில் இருந்து நாயண்டஹள்ளி செல்லும் வெளிவட்ட சாலையில் சும்மனஹள்ளி அருகில் இச்சம்பவம் நடந்துள்ளது.காரின் பதிவு எண்ணை வைத்து, கண்டுபிடித்த போலீசார், யாத்கிரை சேர்ந்த கார் ஓட்டுநர் கரியப்பா மானப்பா, 21, என்பவரை கைது செய்தனர். காரின் பின்னால் நின்றபடி பயணித்தது அவரது இரு நண்பர்கள் என்று தெரியவந்தது. மூவரையும் எச்சரித்து, ஜாமினில் விடுவித்தனர்.காருக்கான ஆனைத்து ஆவணங்களும் சரியாக இருந்ததால், அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.