உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதுநிலை மருத்துவ நீட் தேர்வு: ஆக., 3ல் நடத்த உத்தரவு

முதுநிலை மருத்துவ நீட் தேர்வு: ஆக., 3ல் நடத்த உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வை ஆக., 3ம் தேதி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 'மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு ஜூன் 15ல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்' என, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.இவ்வாறு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'இளநிலை நீட் நுழைவுத் தேர்வு, பொறியியல் படிப்புக்கான, ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் ஒரே கட்டமாக தான் நடத்தப்படுகின்றன. 'அப்படி இருக்கும்போது இந்த தேர்வை மட்டும் ஏன் இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டும்?' என, கேள்வி எழுப்பியதோடு, இரு கட்டங்களாக நடக்கும் தேர்வு முறையை ரத்து செய்து ஒரே கட்டமாக நடத்த உத்தரவிட்டது.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்வை ஒரே கட்டமாக நடத்த ஆகஸ்ட் வரை அவகாசம் அளிக்கும்படி, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தது.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தேர்வு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், '2.20 லட்சம் மருத்துவர்கள் எழுதும் தேர்வை ஒரே கட்டமாக நடத்தினால், தற்போது உள்ள தேர்வு மையங்களை விட கூடுதலாக, 450 மையங்கள் தேவைப்படுகின்றன. எனவே, ஆக., 3 வரை அவகாசம் வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார்.இதைக்கேட்ட நீதிபதிகள், 'நீங்கள் சொல்லும் தேதிக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. தேர்வு மையங்களை கண்டறிய ஏன் இவ்வளவு அவகாசம் தேவைப்படுகிறது?' என கேள்வி எழுப்பினர்.பாதுகாப்பு காரணங்கள் உள்ளிட்டவற்றை தேர்வு வாரியம் தரப்பு எடுத்துச் சொன்னதும் அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'ஆக., 3ம் தேதிக்குள் இந்த தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். அதற்கு மேல் நிச்சயம் அவகாசம் வழங்க முடியாது' என, திட்டவட்டமாகக் கூறினர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி