பீஹார், மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் பிரசாந்த் கிஷோர் பெயர்: தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
பாட்னா: பீஹார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில், தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோரின் பெயர் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c8kw3z6o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பலத்த போட்டி இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ., 6ல், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ., - காங்., கூட்டணி களிடையே பலத்த போட்டி நிலவுகிறது. புது போட்டியாளராக, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் களத்தில் குதித்துள்ளது. இந்நிலையில், பீஹார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில், ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோரின் பெயர் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நோட்டீஸ் மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜியின் சட்டசபை தொகுதியான பபானிபூரில், பிரசாந்த் கிஷோரின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவரது முகவரியாக 121, காளிகட் சாலை என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த முகவரியில் தான், திரிணமுல் காங்., அலுவலகம் உள்ளது. கடந்த 2021ல், மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். அந்த சமயத்தில் அவர், வாக்காளராக பதிவு செய்திருக்கலாம் என, கூறப்படுகிறது. பீஹாரில், ரோஹ்தஸ் மாவட்டத்தின் சசாரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட தன் பூர்வீக இடமான கர்கஹர் சட்டசபை தொகுதியிலும், வாக்காளராக பிரசாந்த் கிஷோர் பதிவு செய்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, எந்தவொரு நபரும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்யக்கூடாது. இது தொடர்பாக, மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி, பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.