புதுடில்லி: 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி உட்பட, 71 பேருக்கு பத்ம விருதுகளை, டில்லியில் நேற்று நடந்த விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.கல்வி, வணிகம், கலை, மருத்துவம், விளையாட்டு, சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tn1azfgz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0139 பேருக்கு விருது
மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரைகளை பத்ம விருது கமிட்டி பரிசீலித்து, பிரதமர், ஜனாதிபதி ஒப்புதலுக்குப் பின், குடியரசு தினமான, ஜன., 26ம் தேதிக்கு முன்தினம் அறிவிக்கப்பட்டு ஏப்ரலில் வழங்கப்படும்.இந்த ஆண்டு, 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று நடந்த விழாவில், முதற்கட்டமாக 71 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார். மீதமுள்ளவர்களுக்கு மற்றொரு நாளில் வழங்கப்படும்.டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த விழாவில், 'தினமலர்' நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர். லட்சுமிபதிக்கு, பத்ம ஸ்ரீ விருதை வழங்கி, ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்.பத்திரிகை தொடர்பான பல்வேறு தேசிய அமைப்புகளில், உயர் பதவி வகித்துள்ள லட்சுமிபதி, மதுரையில் கல்வி நிலையங்களை துவங்கி, கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்கள் தரமான கல்வி கற்க உதவினார்.கடல் சார்ந்த 'சாஹர் சந்தேஷ்' (இ - பேப்பர்) மருத்துவம் தொடர்பான, 'தி ஆன்டிசெப்டிக்' மற்றும் ஆரோக்கியம் சார்ந்த 'ஹெல்த்' ஆகிய பத்திரிகைகளையும் நடத்தி வரும் லட்சுமிபதி, பத்திரிகை துறையிலும், கல்வி துறையிலும் ஆற்றிவரும் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.'தினமலர்' நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் மூன்றாவது மகன் ஆர்.லட்சுமிபதி; 1935ல் பிறந்தார். திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (வேதியியல்) பட்டம் பெற்ற பின், பிரிட்டனில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் செய்தித்தாள் மேலாண்மை பயின்றார்.Galleryகவுரவ டாக்டர் பட்டம்
கடந்த 1956ல் 'தினமலர்' நாளிதழில் பொறுப்பு ஏற்றார். துவக்கத்தில் விளம்பரப் பிரிவில் பணியாற்றினார். இதழியல் அனுபவம், மேலாண்மை திறனால், அதிக விற்பனையாகும் நாளிதழாக 'தினமலர்' நாளிதழை உயர்த்தினார்.பி.டி.ஐ., செய்தி நிறுவனம், இந்திய நாளிதழ் சங்கமான ஐ.என்.எஸ்., இந்திய மொழி நாளிதழ் கூட்டமைப்பான, ஐ.எல்.என்.ஏ., மற்றும் நாளிதழ் விற்பனை தணிக்கை அமைப்பான, ஏ.பி.சி., ஆகியவற்றின் தலைவர் பொறுப்பிலும் பணியாற்றியுள்ளார். பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் உறுப்பினராகவும் இருந்தார்.சுப்பலட்சுமி லட்சுமிபதி அறக்கட்டளையை நிறுவி, எஸ்.எல்.சி.எஸ்., அறிவியல் கல்லுாரி, கே.ஆர்.எஸ்., பள்ளி, ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸ் கல்லுாரி போன்றவற்றை துவக்கினார்.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும், கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் லட்சுமிபதிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன. மதுரை காமராஜ் பல்கலைக்கழக சிண்டிகேட்டில் கவர்னரின் பிரதிநிதியாக பணியாற்றினார்.
71 பேருக்கு விருது!
'சுசுகி மோட்டார்ஸ்' நிறுவனத்தின் தலைவராக இருந்த ஒசாமு சுசுகி, கேரளாவைச் சேர்ந்த மலையாள எழுத்தாளர் மற்றும் இயக்குநர் எம்.டி. வாசுதேவன் நாயர் ஆகியோருக்கு மறைவுக்குப் பின், பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த வயலின் வித்வான் எல். சுப்ரமணியம், தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த, ஏ.ஐ.ஜி., மருத்துவமனை தலைவர் நாகேஸ்வர் ரெட்டி, பத்ம விபூஷண் பெற்ற நான்கு பேரில் அடங்குவர். இதுபோல், 10 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. தமிழ் நடிகர் அஜித் குமார், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, முன்னாள் ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. பாடகர் பங்கஜ் உத்தாஸ், பீஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் மறைவுக்குப் பின், இந்த விருது வழங்கப்பட்டது.தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஹட்சன் பால் நிறுவனத்தின் நிறுவனர் சந்திரமோகன், சமையல் கலை நிபுணர் தாமு, சிற்பக்கலைஞர் ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி ஸ்தபதி, மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்யநாதன் உட்பட 57 பேருக்கு, பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.