உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயுஷ்மான் பாரத் சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகள் ஆதிக்கம்

ஆயுஷ்மான் பாரத் சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகள் ஆதிக்கம்

புதுடில்லி: 'பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு ஆண்டுதோறும் செலவிடப்படும் மொத்த தொகையில் மூன்றில் இரண்டு பங்கு, தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கிறது' என, தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள, 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் பயன்பெறும் வகையில், 'ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய திட்டம்' என்ற இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு கடந்தாண்டு அக்டோபரில் துவக்கி வைத்தது. இந்த திட்டம், 2018ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம். இந்த திட்டத்தின் வாயிலாக, தகுதியான குடும்பங்களுக்கு ஆண்டுதோறும், 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், தனியார் மருத்துவமனைகள் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக, தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:

ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய திட்டத்தின் வாயிலாக நாடு முழுதும் உள்ள மருத்துவமனைகளில் சேர்ந்து, இதுவரை, 9 கோடி பேர் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கு, 1.29 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்காக அரசு வெளியிட்டுள்ள பட்டியலில், நாடு முழுதும் உள்ள, 31,005 மருத்துவமனைகள் இடம்பெற்றுள்ளன. இதில், 45 சதவீதம் தனியார் மருத்துவமனைகள். இதுவரை சிகிச்சை பெற்ற, 9.19 கோடி பேரில், 52 சதவீதத்தினர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த சிகிச்சைக்காக செலவிடப்பட்ட தொகையில், மூன்றில் இரண்டு பங்கு, அதாவது, 66 சதவீதம் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளன. சிறுநீரகம் செயலிழந்ததை அடுத்து, ரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் அதிகப்படியான நீரை அகற்றும், 'டயாலிசிஸ்' சிகிச்சைக்கு, இந்த திட்டத்தின் கீழ் அதிகளவில் நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளது. மொத்த சிகிச்சையில், 14 சதவீதம், டயாலிசிஸ் சிகிச்சைக்காகவும், 4 சதவீதம் காய்ச்சலுக்காகவும், தலா மூன்று சதவீதம் குடல் அழற்சி மற்றும் விலங்கு கடித்தல் ஆகியவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த, 2024 - 25ம் நிதியாண்டில், கண் மருத்துவம், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை ஆகியவை இந்த திட்டத்தில் பிரதானமாக இடம் பிடித்துள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள், தங்கள் சொந்த மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுதும் உள்ள பிற மாநிலங்களிலும் சிகிச்சை பெற்று கொள்ளலாம். அந்த வகையில், வெளிமாநிலங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றதிலும், வெளிமாநிலங்களில் இருந்து வந்து சிகிச்சை பெற்றதிலும், உத்தர பிரதேசம், பஞ்சாப் ஆகியவை முன்னணியில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை