உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சமசாலி சமூகத்தினர் மீது தடியடி நடத்தியதை கண்டித்து போராட்டம்!:

பஞ்சமசாலி சமூகத்தினர் மீது தடியடி நடத்தியதை கண்டித்து போராட்டம்!:

பெலகாவி, டிச. 13- பஞ்சமசாலி சமூகத்தினர் மீது தடியடி நடத்தியதை கண்டித்து, சாலைகளில் டயர்களை எரித்து ஆர்ப்பாட்ட கும்பல் ஆவேச போராட்டம் நடத்தினர். 'முதல்வர் சித்தராமையா இதயமற்றவர்' என்று, மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமி கொந்தளித்து உள்ளார். லிங்காயத் சமூகத்தின் உட்பிரிவான, பஞ்சமசாலி சமூகத்தினர் தங்களுக்கு 2ஏ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, 2022 ம் ஆண்டில் இருந்து தொடர் போராட்டங்கள் நடத்துகின்றனர். பாகல்கோட் கூடலசங்கமாவில் உள்ள லிங்காயத் சமூக மடத்தின், மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமி தலைமையில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இந்நிலையில், 'சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பு, காங்கிரஸ் அரசு தங்களுக்கு 2ஏ இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இல்லா விட்டால் 5,000க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் வந்து, சுவர்ண விதான் சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்' என்று, மடாதிபதி எச்சரித்து இருந்தார். ஆனால், மாநில அரசு செவிசாய்க்கவில்லை.

பேச்சுவார்த்தை

இதனால், கடந்த 10ம் தேதி கர்நாடகாவின் வடமாவட்டங்களில் வசித்து வரும், பஞ்சமசாலி சமூகத்தினர் டிராக்டர்களில், பெலகாவி நோக்கி வந்தனர். அவர்களை ஹிரேபாகேவாடி சோதனை சாவடி அருகே, போலீசார் தடுத்து நிறுத்தினர்.சுவர்ண விதான் சவுதா அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மடாதிபதி உள்ளிட்டோரிடம், அமைச்சர்கள் மஹாதேவப்பா, வெங்கடேஷ், லட்சுமி ஹெப்பால்கர் பேச்சு நடத்தினர். 'முதல்வரிடம் பேச்சு நடத்த அழைத்து செல்கிறோம்' என்று அழைப்பு விடுத்தனர். ஆனால், 'முதல்வர் இங்கு வர வேண்டும்' என்று, மடாதிபதி கூறியதால் அமைச்சர்கள் சென்று விட்டனர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் அத்துமீறி விதான் சவுதாவிற்குள் நுழைய முயன்றனர். இதனால் போராட்டக்காரர்கள், போலீசார் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்கியது. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதில், பஞ்சமசாலி சமூகத்தின் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மடாதிபதி கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார்.

எதிராக கோஷம்

இந்நிலையில், 'தடியடி நடத்திய பெலகாவி போலீஸ் கமிஷனர் யடா மார்டினை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்' என்று, மடாதிபதி கோரிக்கை வைத்தார். ஆனால், அரசு ஏற்கவில்லை. கோபம் அடைந்த மடாதிபதி, தடியடி நடத்தியதை கண்டித்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தார். மடாதிபதியின் அழைப்பை ஏற்று பெலகாவி, கொப்பால், தார்வாட், யாத்கிர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் நேற்று பஞ்சமசாலி சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். பெலகாவியின் அதானி குண்டேவாடி கிராமம் வழியாக செல்லும், ஜட்டா - ஜம்போடி சாலையில் டயர்களை போட்டு எரித்தனர். முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக கோஷம் போட்டனர். தார்வாடில் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த வக்கீல்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெலகாவி ஹிரேபாகேவாடியில் உள்ள சுங்கச்சாவடி அருகே, மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமி தலைமையில் போராட்டம் நடந்தது.

வெளிப்படை

அப்போது அவர் பேசியதாவது:எங்களுக்கு எதிராக முதல்வர் சித்தராமையா செயல்படுகிறார். அவர் இதயமற்றவர். நீங்கள் ஆட்சிக்கு வர நாங்கள் ஆதரவு அளித்தோம். பதிலுக்கு எங்களை அடித்தீர்கள். இதன் விளைவுகளை அடுத்த தேர்தலில் சந்திப்பீர்கள். பசவண்ணரை கலாசார தலைவராக அறிவித்ததும், நாங்கள் உங்களை நினைத்து பெருமைப்பட்டோம்.ஆனால் லிங்காயத்துக்கள் மீதான உங்கள் அணுகுமுறை என்ன என்பதை காட்டி உள்ளீர்கள். உங்களால் இடஒதுக்கீடு கொடுக்க முடியாவிட்டால் சொல்லி விடுங்கள். நாங்கள் எங்கள் வழியை பார்த்து கொள்வோம். போராட்டத்தில் ஈடுபட்டதாக எங்கள் சமூகத்தினர் மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். வெளிப்படையாக எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது. போலீசார் மப்டியில் வந்து நாங்கள் அணியும் துண்டை அவர்கள் தோளில் போட்டு கல்வீசினர். இதற்கு டிரோன் கேமரா சாட்சியாக உள்ளது. தடியடி நடத்தியதில் கப்சி என்ற நபருக்கு ஒரு கால் முறிந்து உள்ளது. எங்களது இரு கால்களை உடைந்தாலும் தவழ்ந்து வந்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி